விடைபெறும் நீதிபதி ஸ்ரீநிதிக்கு கல்முனையில் பாராட்டு விழா.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி கௌரவ ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்கள் தனது 20 வருட கால நீதிச் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு, அவரைப் பாராட்டி கௌரவிக்கும் பெரு விழா இன்று கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம்.ரமீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களும் விசேட நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்து, வாழ்த்துரை நிகழ்த்தினார். அத்துடன் சிரேஷ்ட சட்டத்தரணி றைசுல் ஹாதி அவர்கள் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தம்பதியினரை பொன்னாடை போர்த்தி, வாழ்த்துரை நிகழ்த்தினார். பெண் சட்டத்தரணிகள் சார்பிலும் அவர்கள் ஒன்றிணைந்து நினைவுச் சின்னம் வழங்கி நீதிபதியைக் கௌரவித்தனர்.

மேலும், சிரேஷ்ட சட்டத்தரணிகளான எம்.எஸ்.எம்.ஜெமீல், ஏ.எம்.பதுர்தீன், அன்சார் மௌலானா, ஆரிப் சம்சுதீன், யூ.எம்.நிசார், ஏ.எல்.நதீர், எம்.எஸ்.எம்.ரஸ்ஸாக், லியாகத் அலி, சாரிக் காரியப்பர், கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோருடன் கனிஷ்ட சட்டத்தரணிகளான துலாஞ்சலி, பெனாஸிர் ரஹ்மியா, ராமேஸ்வரி, இயாஸ்தீன் ஆகியோரும் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்களின் உன்னதமான நீதிச் சேவைகளை சுட்டிக்காட்டி உரையாற்றினர்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிகா காரியப்பர் அவர்கள் நிகழ்வுகளை நெறிப்படுத்தியதுடன் நன்றியுரையும் நிகழ்த்தினார். கனிஷ்ட சட்டத்தரணி சுஹால்ஸ் பிர்தௌஸ் வாழ்த்துப்பா வாசித்துக் கையளித்தார்.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டபோது அம்பாறை மாவட்டத்தில் பலரின் ஜனாஸாக்கள் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதுடன் அவற்றை எரிக்காமல் வைத்திருக்குமாறு கட்டளையிட்டிருந்த நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்களின் துணிச்சலான தீர்ப்புகள் குறித்து சட்டத்தரணிகள் பலரும் தமதுரையின்போது சுட்டிக்காட்டி, பாராட்டுத் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.