தமிழ் மக்களை புறக்கணித்தது சர்வதேச அழுத்தத்தை தாமாக பெற்றுக்கொள்வதற்கான வழியை அரசே திறந்து கொடுத்துள்ளது

யுத்தக் குற்றங்களுக்கு நீதி வேண்டும் என தமிழர் தரப்பு வேண்டுகோள்களை விடுத்துக்கொண்டிருக்கும்  இந்த சந்தர்ப்பத்தில் பல குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக இருந்து பொதுமன்னிப்பு பெற்ற ஒருவரை தலைவராக்கி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தை பேசு பொருளாக்கி இனரீதியாக ஆட்களை உள்வாங்கும் போது தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமை வரலாற்று துரோகமாகும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஷிபான் பஹுறுத்தீன் தெரிவித்தார்.

இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர், “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற போர்வையில் ஞானசார தேரரை தலைவராகக் கொண்ட வர்த்தமானியை அண்மையில் ஆளும் கோத்தாபய அரசு வெளியிட்டது.  நான்கு முஸ்லிம் பெயர்தாங்கிகளைக் கொண்டு வர்த்தமானி வெளிவந்தது. ஆனால் தமிழர் பிரதிநிதி ஒருவர் கூட  உள்வாங்கப்படவில்லை. நாட்டின் பரப்புக்குள்ளே ஒன்பது குற்றங்களை செய்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு பெற்ற ஒருவரை ” ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணிக்கு நியமித்தது தொடர்பில் மூவின மக்களும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

வழக்கு இலக்கம் 6315/2000 இல் வாகன அனுமதி பாத்திரம் இல்லாமல் பயணித்தமை, சாரதி அனுமதி பாத்திரம் இன்றி பயணித்தமை, மது போதையில் வாகனம் செலுத்தியமை, விபத்தொன்றை தடுக்க முற்படாமை, விபத்து பற்றி அதிகார துறையினருக்கு அறிவிக்காமை போன்ற 9 குற்றங்களுக்காக நீதிமன்றத்தால் ஞானசார தேரர்குற்றவாளியாக்கப்பட்டதுடன் தாமும் அந்த குற்றங்களை ஒப்புக்கொண்டுமுள்ளார். அது மாத்திரமின்றி மூன்று வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்கு சென்று ஜனாதிபதி பொது மன்னிப்பில் உறுப்புரை 34(1) பிரகாரம் மன்னித்து விடுதலையானவராவார்.

மாத்திரமன்றி இவ்வாறான ஒருவரைத் தலைவராகக் கொண்டு அரசு சட்டம் உருவாகுமானால் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் நீதி வேண்டி நிற்கும் தமிழ் உறவுகளுக்கு எவ்வாறு நீதி கிடைக்கும் என்ற வினா தொக்கி நிற்கிறது. ஆகவேதான் தமிழர் தரப்பு இதனை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று தோன்றுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்களும் ஊடகங்கள் வாயிலாக தமிழர் தரப்பு உள்வாங்கப்படாமை தமக்கு நன்மையே என்ற கருத்தினை வலியுறுத்தியிருந்தார். தமிழர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு இருப்பதானது ஆளும் அரசுக்கு தெரியாமலும் இல்லை. வேண்டுமென்றே தமிழர் தரப்பினை புறக்கணித்தது சர்வதேச ரீதியாக அழுத்தம் ஒன்றை தாமாகவே பெற்றுக்கொள்வதற்கான வழியை அரசே திறந்து கொடுத்துள்ளது.

டயஸ்போராக்களின் அழுத்தத்துக்கு முகம்கொடுத்து அரசு 2010ஆம் ஆண்டிலே வகுத்த தந்திரோபாயத்தை மீண்டுமொருமுறை வகுக்கின்றது. முன்னைநாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சாரக்கதிரையிலே அமர்த்தும் பேச்சை மீண்டும் கிளரி இலாபம் தேட முயற்சி செய்வதாகவே இதனை நோக்கவேண்டிஉள்ளது. 2019 ஆம் ஆண்டில் முஸ்லிம் விரோத போக்கிலேயே அரசு 69 லட்சம் வாக்குகளை அரசு எடுத்திருந்தது. பெரும்பான்மை சிங்கள மக்கள்  முஸ்லிம்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை என்பது தெளிவாக புலப்பட்டு கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் மீண்டும் ஒருமுறை முஸ்லிம்களை நோக்கி வகுக்கும் தந்திரம் சிங்கள மக்களிடையே பலிக்காது என்பதினாலேயே தமிழர்களை நோக்கி அரசு திட்டம் வகுக்கிறது என்றே சொல்லத் தோன்றுகின்றது.

ஆகவேதான் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களின் வாக்குகளினால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு கூட தகுதி இல்லாத ஒருவரை, சிறுபான்மை மக்களின் எதிரியாக சித்தரிக்கப்பட்ட ஒருவரினை வைத்து ஆளும் அரசு தனக்காக வாக்களித்த  69 லட்சம் மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற மந்திரக்கோலை கையில் எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.