தமிழர்கள் காலாகாலமாக வாழும் காணிகளுக்கே உறுதிப்பத்திரம் கிடைக்கவில்லை, திடீரென குடியேறுபவர்கள் மாத்திரம் எவ்வாறு பத்திரங்களுடன் வருகிறார்கள்..? (ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் – வ.சுரேந்தர்)

(சுமன்)

எமது மாவட்டத்தில் தமிழர்கள் தற்போது வரை காலா காலமாக வாழ்கின்ற காணிகளுக்கே இன்னும் உறுதி, காணிப்பத்திரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் திடீர் குடியேற்றம் பெறுபவர்கள் மாத்திரம் எவ்வாறு காணி, உறுதிப் பத்திரங்களுடன் வருகிறார்கள்? என ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் வ.சுரேந்தர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் காணிப்பத்திரங்கள் வழங்குகின்ற செயற்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு  மாவட்டத்தில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்று எமது சமூகம் வெறுமையாகவே உள்ளது. இந்த மாவட்டத்தில் எமது மக்கள் எத்தனை எத்தனை பிரச்சனைகளைத் தான் முகங்கொடுக்கின்றார்கள்.

எமது மாவட்டத்தில் இடம்பெறுகின்ற திடீர் திடீர் புதிய குடியேற்றங்களால் மக்கள் மிகவும் அவதியுற்றுள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்கள் தமிழர்கள் வாழ்கின்ற காணியில் தற்போது வரை வசித்து வருபவர்களுக்கே இன்னும் உறுதி, காணிப்பத்திரம் என்பன கிடைக்கவில்லை. ஆனால் திடீர் குடியேற்றம் பெறுபவர்கள் மாத்திரம் எவ்வாறு காணி பத்திரத்துடன் வருகிறார்கள். இவ்வாறான விடயம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று தான் சொல்லப்படுகின்றது. ஆனால் இந்தப் பொதுஜன பெரமுனவின் ஆட்சியில் வெவ்வேறான சட்டங்களையும், மாற்று நடவடிக்கைகளையுமே காணக்கூடியவாறு உள்ளது.

தற்போதைய நிலவரத்தை எடுத்து பார்ப்போமானால் அவர் சரி இவர் பிழை என்று பழி போடாமல் மட்டக்களப்பு மாவட்ட இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் முகமாக ஏற்படுத்தப்படுகின்ற மறைமுக குடியேற்றங்களை தடுப்போம். கட்சி பிரிவினை மறந்து இராஜதந்திர முறையில் இவ்விடயங்கள் வென்றெடுக்கப்பட வேண்டும்

எனவே அனைத்து அரசியல் பிறமுகர்களும் இந்த விடயத்தை வைத்து பிரபல்யத்திற்காக ஓடாமல் அமைதியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நடவடிக்கைகளை ஓன்றினைந்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.