குறைந்த விளைச்சலில் விவசாயிகள் மில்லியனர்களாக ஆகுவதென்றால் எமது மக்கள் அரிசியை விடுத்து வேறு எதையாவது சாப்பிட வேண்டும்… (பாராளுமன்ற உறுப்பினர் – இரா.சாணக்கியன்)

(சுமன்)
இவர்கள் சொல்வது போல் குறைந்த விளைச்சலில் விவசாயிகள் மில்லியனர்களாக ஆகுவதென்றால் எமது மக்கள் அரிசியை விடுத்து வேறு எதையாவது சாப்பிட வேண்டும். விளைச்சல் குறைந்தால் நெல் விலை அதிகரித்து அரிசியின் விலை அதிகரிக்கும். அரிசியின் விலை அதிகரித்தால் அன்றாடம் சாப்பிடுவதற்குக் கூட மக்கள் கஷ்டப்படும் நிலைமையே உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

எங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உங்களின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது அபிவிருத்தி அசியல் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் வரலாறு காணாத அளவிற்கு மக்களின் எதிர்ப்பினை சந்தித்த அரசாஙகமொன்று செயலில் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் மிகமிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் எதிர்பைச் சம்பாதித்த அரசென்று சொன்னால் அது இதுவாகத் தான் இருக்கும்.

நேற்றைய தினம் பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது மாநாட்டிலேயே இதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ராஜபக்ஷ குடும்பத்தின் மூவர் மூன்று விதமான கருத்துகளைச் சொல்லியிருந்தார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் மோசமான நிலைமை குறித்த உண்மையான கருத்தை இதன் போது வெளியிட்டிருந்தார்.

கடந்த காலங்களிலே தாங்கள் ஒரு தனிக்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களின் கட்சி என்பன மொட்டுவின் பங்காளிகள் என்பதை நேற்றைய தினம் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இவை அனைத்தையும் தாண்டி நாங்கள் தற்போது மட்டக்களப்பின் நிலைமை குறித்துப் பார்த்தால், மட்டக்களப்பில் பசசளை இல்லாமல் விவசாயிகள் மிகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கையில் பொங்கலுக்குப பின்னர் விவசாயிகள் மில்லியனர்களாகப் போவதாக அலட்சியமான கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

ஏனெனில் இந்த மாவட்டத்திலே விவசாயத்தை நம்பி வாழும் மக்களை மிகவும் கேவலப்படுத்தும் முகமாக பசளை இல்லாவிட்டாலும் விவசாயம் செய்ய வேண்டும், மில்லியனர்களாக ஆக முடியும் என்ற பொய்யான விடயங்களைச் சொல்வதன் ஊடாக பொருளாதாரம் தொடர்பாக அவருக்கு இருக்கும் அறிவே வெளிப்படுகின்றது.

இவர்கள் சொல்வது போல் குறைந்த விளைச்சலில் விவசாயிகள் மில்லியனர்களாக ஆகுவதாக இருந்தால் இந்த மாவட்டத்திலே மக்கள் அரிசியை விடுத்து வேறு எதையாவது சாப்பிட வேண்டும். ஏனெனில் விளைச்சல் குறையுமாக இருந்தால் நெல்லின் விலை அதிகரிக்கும் நெல் விலை அதிகரித்தால் அரிசியின் விலை அதிகரிக்கும். அரிசியின் விலை அதிகரித்தால் அன்றாடம் சாப்பிடுவதற்குக் கூட மக்கள் கஷ்டப்படும் நிலைமையே உருவாகும்.

எப்பாடுபட்டாவது விவசாயிகள் முட்டி மோதி விவசாயத்தில் ஈடுபட்டாலும், அடுத்து இருக்கும் மிக முக்கிய பிரச்சனை யானைப் பிரச்சனை. கடந்த சில நாட்களாக யானை தாக்கத்திற்குள்ளாகி எத்தனையோ பேர் மரணத்தைத் தழுவிக் கொண்டனர். இது மிகவும் கவலையான விடயம்.

கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று வந்தவர்களிடம் ஒரு கேள்வி. 2020ம் ஆண்டு செம்டெம்பர் மாதம் வரை கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சி அரசாங்கத்தினால் 670 கிலோமீட்டர் யானை வேலி அமைக்கப்பட்டது. அக்காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட எமது மக்களுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற யானை வேலி விடயத்தைச் செய்திருந்தோம். வடக்கு கிழக்கிலே சுமார் 1200 கிலோமீட்டர் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அரசாங்கத்துடன் இருந்து மக்களுக்கு நன்மை செய்யப் போகின்றோம், கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று வந்தவர்களால் 2020 செம்டெம்பர் தொடக்கம் 2021 செப்டெம்பர் வரை  40 கிலோமீட்டர் யானை வேலி தான் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழர் வாழும் பிரதேசம் ஒன்றோ இரண்டு தான் இருக்கின்றது.

அபிவிருத்தி என்பது வெறுமனே கொங்கிறீற்றுப் பாதை போடுவதோ கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்று சொல்லி காசைப் பிரித்துக் கொடுப்பதோ அல்ல. எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றமே மக்களின் பொருளாதார நலனுக்கான அபிவிருத்தி என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையிலே இன்று எங்கள் விவசாயிகள் உரமில்லாமல் களை நாசினிகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இன்று அரசாங்கத்துடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறுமனே தென்னங்கன்றுகளைக் கொடுத்து வளர்க்கச் சொல்லுகின்றார்கள். ஆனால், அந்தத் தென்னங் கன்றுகளுக்கு வண்டு அடித்தால் அதனைத் தடை செய்வதற்கான உரிய கிரிமி நாசினிகள் இங்கு இல்லை.

எங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உங்களின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது அபிவிருத்தி அசியல் அல்ல. அண்மையில் காணி அமைச்சர் எமது மாவட்டத்திற்கு வந்த யார் யாருக்கு காணிப் பத்திரம் கொடுத்தார் என்பதை அனைவரும் அறிவார்கள். எமது மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதேநேரம் இயற்கைப் பசளை தயாரிப்பதற்கு காணி வழங்குவதாகச் சொல்லியிருந்தார்கள். அவை அனைத்தும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

எமது மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் சவால் விட்டார் புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதியைக் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யுமாறு, ஆனால் என்னால் கொண்டுவரப்பட்ட கனேடிய முதலீட்டுத்திட்டத்தை அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற பதவியைப் பயன்படுத்தி தடை செய்ததே சிவநேசதுரை சந்திரகாந்தன் தான்.

எங்களால் கொண்டுவரப்பட்ட திட்டத்தையும் தட்டிக் கழித்து விட்டு எமது மண்ணையும் காணியையும் அபகரித்து விற்ற நீங்கள் மில்லியனர், பில்லியனர் ஆகுவதற்கு எமது மாவட்ட மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.