ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி: கொரோனாவால் எல்லைகளை மூடியதன் விளைவா?

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

மார்ச் 2021 முதல் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 51 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது என சர்வதேச மாணவர் சேர்ப்பு நிறுவனமான Adventus தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய கணக்குப்படி, மாணவர் விசா கொண்ட 259,752 பேர் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளனர். அதே போல், ஆஸ்திரேலியாவின் மாணவர் விசா கொண்ட 148,464 பேர் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே உள்ளனர்.

கொரோனாவுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளது என Universities Australia அமைப்பின் துணை தலைமை நிர்வாகி அன்னே-மேரி லான்ஸ்டவுன் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா பெருந்தொற்றின் போது சர்வதேச எல்லைகளை மூடியது ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விருப்பத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என லான்ஸ்டவுன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம் (ACT), விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, குவின்ஸ்லாந்த் ஆகிய மாநிலங்களுக்கு வெளிநாட்டு மாணவர்கள் திரும்புவதற்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது குறித்து Universities Australia அமைப்பின் துணை தலைமை நிர்வாகி அன்னே-மேரி லான்ஸ்டவுன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஆஸ்திரேலியாவை கல்வி கற்க தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டு மாணவர்கள் வேறு ஏதேனும் நாட்டில் கல்வி கற்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என Adventus தலைமை நிர்வாக அதிகாரி ரியான் டிரெய்னர் கூறியுள்ளார்.

“இது ஆஸ்திரேலியாவின் மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் வருவதை இழந்திருக்கிறோம். ஆஸ்திரேலிய அரசு அனைத்து மாநிலங்களுக்குமான ஒருங்கிணைந்த ஒரு செய்தியை வெளிநாட்டு மாணவர்களுக்கு தெரிவிக்காவிட்டால், இது ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்,” என ரியான் டிரெய்னர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.