பாடசாலை மாணவர்களுக்கு புதிய கல்வி திட்டம் அறிவிப்பு

கொவிட் தொற்று பரவல் காரணமாக, பாடசாலை மாணவர்களுக்கு இல்லாது போன கல்வியை மீள வழங்குவதற்கான புதிய முறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவிக்கின்றார்.

பாடசாலை மாணவர்களில் அத்தியாவசிய தரப்பினர் குறித்து அதிக கவனம் செலுத்தி, இந்த முறை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் மாணவர்கள் தவறவிட்ட கல்வியை, வழங்கும் நோக்குடன் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையான காலப் பகுதிக்குள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

சில சந்தர்ப்பங்களில் இந்த திட்டத்தை நிறைவு செய்யும் காலப் பகுதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கு, 2022ம் ஆண்டு டிசம்பர் வரை கல்வி கற்பிக்கும் யோசனையை தாம் முன்வைத்துள்ளதாகவும், 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆகும் போது மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளில் வழமைக்கு திரும்புவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.

இந்த திட்டம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து தீர்மானம் எடுக்க, பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களை நடத்தியே இந்த திட்டத்தை தாம் தயாரித்துள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவிக்கின்றார்.

அதனால், பரீட்சைகள் நடைபெறும் காலப் பகுதியை பொருத்து, அதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

மாணவர்களினால் தவறவிடப்பட்ட பாடத்திட்டங்களை ஆரம்பத்தில் நிறைவு செய்வதற்கான யோசனையையே தாம் முதலில் முன்வைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

தற்போதுள்ள தரத்திலிருந்து மற்றுமொரு தரத்திற்கு மாணவர்கள் செல்லும் போது, அவர்களுக்கு பரீட்சைகளை நடத்தி, அவர்களின் திறமைகளை கணிப்பிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.