ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிப்புனரமைப்பில் ஐ-றோட் திட்ட வீதியை திறந்து அரசையும் மக்களையும் ஏமாற்றியுள்ளனர் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஒரு இலட்சம் கிலோமீட்டர் வீதிப்புனரமைப்பு தொடர்பில் இன்று கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது
நேற்று முன்தினம்இலங்கை பூராகவும் தேசிய நிழ்ச்சித்திட்டமாக ஒருலட்சம் கிலோமீட்டர் நீளமான கிராமிய வீதிகளை புனரமைத்து திறந்து வைக்கும் நிகழ்வு நாடுதளுவிய ரீதியில் இடம்பெற்றது.
நான் நினைக்கின்றேன் இலங்கை தீவிலே இருக்கின்ற 25 மாவட்டங்களிலும் இந்த தேசிய நிகழ்ச்சித்திட்டம் திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சியைப்பொறுத்தவரையில் திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற வீதியானது பிரதேச சபைக்கு சொந்தமான வீதி. இந்த பிரதேச சபைக்க சொந்தமான வீதியை நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளிற்கு முன்பு ஐ றோட் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுகின்றபொழுது உலகவங்கியின் நிதியுதவியோடு மேற்கொள்ளுவதற்காக நாங்கள் கையளித்து, குறித்த வீதி ஐ றோட் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு இப்பொழுது நிறைவு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இதுவரை குறித்த வீதி பிரதேச சபையிடம் ஒப்படைப்பு செய்யப்படவில்லை.
ஆனால், இப்போது அந்த வீதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினாலே திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. இது எங்களைப்பொறுத்தவரையில் கவலை தருகின்ற விடயம். ஒரு லட்சம் கிலோ மீட்டர் வீதிகளை புனரமைப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம் கடந்த 10 மாதங்களிற்கு முன்பு கிளிநொச்சியிலே ஆரம்பிக்கப்பட்டு, பாரதிபுரம் செபஸ்ரியார் வீதி, சக்திபுரம், எள்ளுக்காடு போன்ற வீதிகள் உட்பட 16 வீதிகளிற்கு பெயர்ப்பலகை இடப்பட்டதுடன், அடிக்கற்களும் நாட்டப்பட்டிருந்தது.
அந்த பெயர் பலகையிலே இலங்கையின் முக்கியமான அமைச்சர்களின் படங்கள் பொறிக்கப்பட்டு அபிவிருத்தி தொடர்பான விபரங்களுடன் இன்றும் இருக்கின்றது. ஆனால் இன்றுவரை அந்த 16 வீதிகளும் ஒரு அடிகூட புனரமைக்கப்படாத நிலை காணப்படுகின்றபொழுது, அந்த வீதிக்கு பதிலாக தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றிலே வீதி திறந்து காட்டியிருப்பது எங்களுடைய மக்களை ஏமாற்றுகின்ற செயல் மாத்திரமல்ல, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்கின்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் இந்த விடயத்திலே கரிசணை கொள்ளாதது மிகுந்த கவலையை தருகின்றது.
அவருடைய பிரதிநிதிகள் இந்த நிகழ்விலே கலந்துகொண்டிருக்கின்றார்கள். உண்மையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர், தன்னுடைய அமைச்சரவையையும், தான் சார்ந்திருக்கின்ற பிரதம அமைச்சரையும் , நாட்டின் ஜனாதிபதியையும் அவமானப்படுத்திய செயலாகவே நான் பார்க்கின்றேன்.
ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட ஒரு லட்சம் கிலோமீட்டர் வேலைத்திட்டம் கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் ஒரு அடிகூட மேற்கொள்ளப்படாத பொழுது, அவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாக காண்பித்து தங்களுடைய செல்வாக்க மக்களிடத்தில் நிமிர்த்திக்கொள்ள எடுத்த இந்த முயற்சியை கரைச்சி பிரதேச சபை கண்டிக்கின்றது.
ஏனெனில் குறித்த வீதி எங்களுக்கு சொந்தமானது. ஆக இங்கு நடைபெற்றிருப்பது ஒரு ஏமாற்று செயல். எங்களுடைய பொதுமக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள். ஐ ரோட் வேலைத்திட்டம் ஒருலட்சம் வீதி புனரமைப்பாக மாற்றி எமது மக்களை ஏமாற்றியிருக்கின்றார்கள்.
அதேபோல் அண்மையில் கரைச்சி கண்டாவளை பிரதேசங்களில் ஏற்கனவே மூன்று நான்கு வருடங்களாக பாவனையில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் வெதுப்பகங்களை அமைச்சர்கள் வந்து திறந்து வைத்திருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன்பு பிரதேச செயலாளரினால் திறந்து வைக்கப்பட்ட தும்புத் தொழிற்சாலையும் எப்போதோ மாவட்ட அரச அதிபரால் திறக்கப்பட்ட சேதனப் பசளையினையும் கடந்த வாரம் அமைச்சரினால் மீளத் திறக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக மக்களை ஏமாற்றும் செயல் நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்