ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணிக்கு கட்சியின் பொருளாளர் கலீலுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டமைக்கும் ஐக்கிய சமாதான கூட்டமைப்புக்கும் தொடர்பில்லை – தலைவர் மிப்ளால் தெரிவிப்பு !

“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவில் நியமிக்கப்பட்டிருக்கும் எங்கள் கட்சியின் பொருளாளர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மானின் நியமனம் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிபாரிசில் இடம்பெற்ற ஒன்றல்ல. இவரின் நியமனத்தின் பின்னணியில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தூண்டுதல்கள் எதுவுமில்லை. கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளின் போது முன்னிலை போராட்டக்காரராக தன்னை நிரூபித்து ஆர்ப்பாட்டங்களில், போராட்டங்களில், சமூக நலன் பேணும் நிகழ்வுகளில் கலந்துகொண்ட சமூக அக்கறை கொண்ட ஒருவராக இருந்ததன் பயனாக ஐ.ஏ. கலீலுர் ரஹ்மானுக்கு இந்த நியமனம் கிட்டியுள்ளது என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் மௌலவி ஐ.எம்.எம். மிப்ளால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில்,

நிறைய சமூக சேவை அமைப்புக்களின் தொடர்புகளை கொண்ட அவர் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் நிறைய விடயங்களை அறிந்த அனுபவமிக்கவர். அவரது விருப்பத்தின் பிரகாரம் அவர் இந்த நியமனத்தை பெற்றுக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து வழமை போன்று இந்த நியமனமும் விமர்சனத்தை இப்போது சந்தித்துள்ளது.  ஒருசிலர் இவரது நியமனத்தை விமர்சித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு இந்த நியமனம் தொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறும் இந்த செயலணியின் மூலம் சமூகத்திற்கு ஏற்படப்போகும் சாதக, பாதக நிலைகளை ஆராயுமாறும், நன்மை தீமைகளை நன்றாக விளங்கி நடக்குமாறும் எங்கள் கட்சியின் பொருளாளர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மானிடம் அறிவுறுத்தியுள்ளோம்.

மிக நீண்டகாலமாக சமூக இன்னல்களுக்காக பேசிக்கொண்டும், போராடிக்கொண்டும் இருக்கும் இவரின் முடிவு இந்த விவகாரத்தில் பிழையானதாக அமையாது என்று நம்புகிறோம். அந்த செயலணி இன்னும் ஒன்று கூடவுமில்லை, செயற்பாடுகள் இன்னும் ஆரம்பிக்கவுமில்லை. அந்த செயலணியின் தொழிற்பாடு ஆரம்பித்த பின்னரே இது தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்க முடியும் எனும் நிலைப்பாட்டில் அவர் உள்ளதாக அறிகிறோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.