மட்டக்களப்பு கோட்டை பூங்காவின் வாவிக்கரை ஓரமாக 800 மீற்றர் நடைபாதை அமைக்க திட்டம்!!

(கல்லடி நிருபர்)
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலுள்ள யாட்வீதியில் அமைந்துள்ள கோட்டை பூங்காவின் வாவிக்கரை ஓரமாக 800 மீற்றர் நடைபாதை அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்மொழிவில் முன்னெடுக்கப்படவுள்ள நடை பாதை அமைத்தல் தொடர்பான கலந்துரையாடலில் மண்னினால் அமைப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்ட யோசனை நிராகரிக்கப்பட்டு புதியயோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக செலவு செய்யப்படவுள்ள நிதியினை மட்டக்களப்பு மாநகர சபையின் ஊடாக பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
மக்களின் நீண்ட கால பாவனைக்கு ஏற்புடைவகையில் கொங்கிறிட் கற்களினால் பாதை அமைப்பதற்கென நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் 42 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு 800 மீற்றர் தூரத்திற்கான பாதையை அமைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஜே.லியணகே மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், மண்முனை வடக்கு பிரதேச செயலக அதிகாரிகள், திட்டமிடல் பிரிவின் உதவிப்பணிப்பளர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.