அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளை செய்யவிடாமல் கல்முனை முதல்வர் இழுத்தடிக்கிறார் : பழிவாங்கலை விட ஊரின் நலனே அவசியம் – மொட்டின் முக்கியஸ்தர் இஸட். ஏ. நௌஸாட்

நூருல் ஹுதா உமர்

ஆளும் அரசாங்கத்தின் முக்கியஸ்தராக இருக்கும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டவலியு. டீ . வீரசிங்கவினால் கல்முனை மாநகர வீதிகளை அபிவிருத்தி செய்ய எனது வேண்டுகோளின் பிரகாரம் 1.9 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வேலைகளை செய்வதற்கு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தடையாக இருப்பதுடன் மாநகரசபையினால் வழங்கவேண்டிய அனுமதிகளையும் மறுத்துவருகிறார். அதனை போன்று மருதமுனை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு உள்நோயாளர் விடுதியமைக்க 82 லட்சமும் மாகாண சுகாதார அமைச்சினால் ஒதுக்கப்பட்டது. கொந்தராத்து காரருக்கு அந்த வேலைக்கான ஒப்படைப்புக்கள் செய்யப்பட்டும் இன்றுவரை அந்த வேலைகளை ஆரம்பிக்க முடியாத நிலை உள்ளது. என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர் இஸட். ஏ. நௌஸாட் தெரிவித்தார்.

இன்று (17) மாலை கல்முனை தனியார் விடுதியில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த காலங்களில் கல்முனை மாநகர முதல்வரின் அதிகார துஸ்பிரயோகங்கள், பொதுச்சொத்துக்களை கையாண்ட அவரது புதல்வரின் போக்குகள், மாநகரில் இடம்பெறும் மோசடிகளை வெளியில் கொண்டுவந்தவன் என்ற ரீதியிலும், மக்களுக்கு கஷ்டத்தை கொண்டுவரும் நோக்கில் அநீதியாக விதிக்கப்பட்ட குப்பைவரிக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தவன் என்ற அடிப்படையிலும் என்னை பழிவாங்குவதாக எண்ணி ஊரின் அபிவிருத்தியை தடுக்கிறார்.

இது ஒன்றும் அவருக்கு புதிதல்ல. கடந்த காலங்களிலும் ஏனையவர்களினால் கொண்டுவந்த ஊருக்கான அபிவிருத்திகளை தடுத்துக்கொண்டிருந்தவர் அவர். மக்களுக்காகவே மாநகர சபை. மாநகரசபைக்காக மக்களில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இது விடயம் தொடர்பில் உரியவர்கள் கவனத்தில் எடுத்து மக்களுக்கு நன்மைபயக்கும் இந்த அபிவிருத்திகளை செய்ய நடவடிக்கை எடுத்துதரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க ஊடகங்களின் உதவியை நாடியுள்ளேன் என்றார்.

இவ்விடயம் தொடர்பில் கல்முனை பிரதேச செயலாளரை தொடர்புகொண்டு வினவியபோது பிரதேச செயலகத்தின் பக்க வேலைகளை முன்கொண்டு செல்வதாகவும் இன்னும் கல்முனை மாநகர சபையின் அனுமதிகள் கிடைக்கவில்லை என்றும் எதிர்காலத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்