ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி போராட்டம்

(க.கிஷாந்தன்)

 ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை, வட்டகொட சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

மாணவர்களும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது.

தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு நுவரெலியா கல்வி பணிமனைக்கு அறிவித்தும் அதற்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

தமது பாடசாலையில் தமிழ் மற்றும் சிங்களம் பேசும் மாணவர்கள் கல்வி கற்கின்றதோடு, தரம் 6 முதல் 11 வரையுள்ள வகுப்புகளுக்கு கற்பிக்க ஒரேயொரு ஆங்கில பாட ஆசிரியர் மாத்திரமே உள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் கணிதம் உள்ளிட்ட பிரதான பாடங்களை கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை எனவும் இதனால் பெரும்பாலான மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடை விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை தொடருமானால் பாடசாலையில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடையும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனவே பாடசாலைக்கு தேவையான ஆசிரியர்களை பெற்று தருவதாக அதிகாரிகள் எழுத்து மூலம் உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும் என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.