பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்ன இந்த அரசாங்கம் மந்தகதியில் – ஆர்.ராஜாராம் தெரிவிப்பு

பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்ன இந்த அரசாங்கம் இன்று முடங்கி கிடப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.

நுவரெலியா, தலவாக்கலையில் 25.11.2021 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மலையக தோட்ட தொழிலாளர்கள் எனும் தேசிய இனத்தின் குரல்வளை நசக்கப்படும் பொழுது உரிமையற்றவர்களாகவும், உணர்வற்றவர்களாகவும், நாயிழும் கேவலமாக சொந்த மண்ணில் நடாத்தப்படுகின்ற பொழுது பொங்கி எழுந்து கேள்விகளை எழுப்பினால் அவர்களுக்கு எதிராக அடக்குமுறை செய்யக்கூடிய ஒரு காட்டு மிராண்டி தனமான செயல்பாடை இந்த தோட்ட நிர்வாகங்கங்கள் செய்து வருகின்றது. அதற்கு இந்த அரசாங்கம் உடந்தையாக இருக்கின்றது.

இன்று தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களிடமிருந்து 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்துவதோடு, அப்பொழுது தான் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க முடியும் என கூறுகின்றது.

தோட்டங்க்ள காடாகி காணப்படுகின்றது. இந்த தோட்ட நிர்வாகத்திற்கு சவாலை விடுகின்றேன். தோட்ட நிர்வாகம், தோட்ட அதிகாரிகள் தோட்டத்தில் இறங்கி 20 கிலோ கொழுந்து பறித்து காட்டினார்கள் என்றால் அவர்கள், கொடுக்கின்ற நிபந்தனைகளுக்கு நாங்கள் ஒத்துக்கொள்கின்றோம்.

ஆக, நிர்வாக அடக்குமுறை காரணமாக பல தோட்டங்களில் உள்ள மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றார்கள். இதற்கு காரணம் நிர்வாகம் தொழிலாளர்களை அடிமைகளாக வழி நடத்துவது தான். அதேவேளை, ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக கூறப்பட்டு இன்று மூன்று நாட்கள் மாத்திரமே தொழில் வழங்குகின்றார்கள். நான்காவது நாள் தொழிலுக்கு சென்றால் தினக்கூலிகளாக நடத்துகின்றார்கள்.

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை இவ்வாறு நசுக்குவது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியாதது ஒன்றல்ல.  அனைத்து விடயங்களும் அரசாங்கத்திற்கு தெரியும். நிர்வாகம் மற்றும் அரசாங்கம் வேடிக்கை பார்கின்றனர்.

நாட்டில் வரவு செலவு இடம்பெறும் திட்டத்தில் சில யோசனைகளுக்கு தீர்வு வழங்குவதாக கூறும் இந்த அரசாங்கம் மலையக மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஏன் தீர்வு வழங்க தயங்குகின்றது. மலையக மக்களுடைய வீட்டு பிரச்சினை, சம்பள பிரச்சினை போன்றவையை ஏன் இந்த அரசாங்கம் கண்டும் காங்காமல் இருக்கின்றது.

தொடர்ந்து இந்த அரசாங்கம் மலையக மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்வதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது. இவர்கள் ஆட்சிக்கு வரும் பொழுது மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம், பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என பொய்யான பிரச்சாரங்களை முன்வைத்தே இந்த அரசாங்கம் வாக்குகளை பெற்றது. அதேபோல் இந்த அரசாங்கத்தில் இருக்கும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் இவ்வாறான போலியான பிரச்சாரங்களையே முன்னெடுத்தார்கள்.

அத்தோடு, இந்த நாட்டில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச நல்ல ஒரு நிர்வாகி, அவருடைய நிர்வாக திறமையில் மலையகத்தில் பாலாறும், தேனாறும் பொழிவதாக சொன்னார்கள். ஆனால் இன்று பஞ்சத்தையே மக்கள் எதிர்நோக்குகின்றார்கள். எனவே இந்த அரசாங்கத்தில் நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும்.

இந்த அரசாங்கம் மலையக சமூகத்தை கரிசனையோடு, சமூகம் சார்ந்த நல்ல திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.