தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று மட்டக்களப்பு மாவட்டம் சாதனை – மூன்று தேசிய விருதுகளையும் தம்வசமாக்கியது!!

தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று  மட்டக்களப்பு மாவட்டம் சாதனை – மூன்று தேசிய விருதுகளையும் தம்வசமாக்கியது.
சமூகசேவைகள் திணைக்களத்தால் வருடாந்தம் மாற்றுத்திறனாளிகளுக்காக நடாத்தப்பட்ட “சுயசக்தி அபிமானி” திட்டத்திற்கான விருது வழங்கும் விழா – 2019 / 2020 நேற்றைய தினம் 25.11.2021 திகதி வியாழக்கிழமை பத்தரமுல்லையில் இடம்பெற்றுள்ளது.
சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் சந்தன ரணவீர ஆராச்சி தலைமையில் பத்தரமுல்லை பலவத்தை, அபேகமையில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவிற்கு பிரதம அதிதியாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளை கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களையும் வழங்கியிருந்தார்.
சமூக சேவை திணைக்களத்தினால்  மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தி தேசிய ரீதியில் 25 மாவட்டங்களுக்கிடையில் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் “சுயசக்தி அபிமானி”  விருது விழாவின் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா நேற்றைய தினம் இடம்பெற்ற போது மட்டக்களப்பு மாவட்டமானது 2019 ஆண்டிற்கான விருதிற்காக தெரிவாகியிருந்த நிலையில் தேசிய  ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது.
அதேவேளை 2020 ஆண்டிற்கான விருதிற்காகவும் தெரிவாகியிருந்த நிலையில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தினையும், மூன்றாம் இடத்தினையும் மட்டக்களப்பு மாவட்டம் பெற்று சாதனை படைத்துள்ளது.
11 பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டியில் 50 பேரிற்கு உட்பட்ட விசேட தேவையுடைய நபர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறந்த சிறுவர் வழிகாட்டல் நிலையங்கள்  எனும் இரண்டு வகையான பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகளில் பங்குபற்றி அதனைத் தொடர்ந்து மாகாண மட்டத்தில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றியீட்டியதனைத் தொடர்ந்து தேசிய ரீதியில் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியதன் அடிப்படையிலேயே குறித்த தேசிய விருதுகள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாகவும்  உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் அவர்களது வழிப்படுத்தல்களுக்கு அமைவாகவுமே எமது மாவட்டமானது தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளதாக தேசிய ரீதிவரைக்கும் போட்டியாளர்களை கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரான மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.ச.கோணேஸ்வரன் விருதுகளைப் பொற்றுக்கொண்டதன் பிற்பாடு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.