முல்லைத்தீவில் பேரெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்து கொண்ட மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துகின்ற மாவீரர் நாள் இன்றாகும்.

இன்றைய நாளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு பாரிய தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், தடைகளை உடைத்து பல்வேறு இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு கடற்கரையிலே சுடர் ஏற்றுவதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியனும் அவரது மனைவி மற்றும் பலரும் சுடர் ஏற்றுவதாகச் சென்ற போது முல்லைத்தீவு கடற்கரையில் வைத்து பீற்றர் இளஞ்செழியனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இடத்தில் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டது.

ஏற்கனவே முல்லைத்தீவு கடற்கரையில் இராணுவம் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அந்த இடத்திலேயே இராணுவத்தினர் மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களை அச்சுறுத்தும் விதமாக செய்யப்பட்டபோதும், பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் குறித்த இடத்திலிருந்து சுடர்களை ஏற்றி சுடர்களை தாங்கியவாறு முல்லைத்தீவு கடற்கரைக்குச் சென்ற பொதுமக்கள் முல்லைத்தீவு கடற்கரையில் சரியாக ஆறு மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்கரையில் பொதுச்சுடரினை பீற்றர் இளஞ்செழியன் கிந்துஜா ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பல்வேறு பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் இன்று சிறப்புற மாவீரர்நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்