சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் மறைவு!வைகோ இரங்கல்.

தென் ஆப்பிரிக்கத் தமிழ்ச் சமூகத்தால், சுவாமி என அன்புடன் அழைக்கப்பெற்ற, அந்நாட்டின் விடுதலைப் போராளிகளுள் ஒருவரான சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் அவர்கள் 94 ஆம் அகவையில், இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

1944 முதல் தன்னைப் பொதுவாழ்வுக்கு ஒப்படைத்துக் கொண்டார்.

1950 ஆம் ஆண்டு, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார்.

1955 ஆம் ஆண்டு, அந்நாட்டின் விடுதலைப் பட்டயத்திற்கு ஏற்பு அளிக்கப்பட்ட கிளிப்டவுன் சொவேட்டோ மக்கள் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றவர்களுள் எஞ்சி இருக்கின்ற ஒருசிலருள் சுவாமிநாதனும் ஒருவர்.

அரசியல் தலைவர், சமூகப் போராளி, தொழிற்சங்க செயற்பாட்டாளர் எனப் பன்முக ஆற்றல் கொண்ட சுவாமிநாதன் அவர்கள், நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற அனைத்துப் போராட்டக் களங்களிலும் பங்கேற்று இருக்கின்றார். நாடு விடுதலை பெற்றபிறகும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்காக உழைத்தார். பல்வேறு சமூக அமைப்புகளில் உயர் பொறுப்புகளை வகித்து இருக்கின்றார்.

காந்திய வழி அறப்போராளிகளுள் ஒருவராகத் திகழ்ந்த மாமனிதர் சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் அவர்களின் மறைவுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.