இந்திய இழுவைப்படகுகளையும், சட்டவிரோத கடற்றொழில்களையும் தடுக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் – ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன்

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் தடுக்க உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சட்டவிரோத சுருக்குவலைப் பயன்பாடு என்பது, அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விழுந்த சுருக்கு கயிறு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்து முன்னெடுத்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் வருகை மற்றும், சட்டவிரோத கடற்றொழில்செயற்பாடுகளுக்கு எதிரான கையெழுத்துவேட்டை முல்லைத்தீவில் 03.12.2021 நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடமாகாண கடற்றொழிலாளர் இணையமும், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் சேர்ந்து தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான கடற்றொழில்களுக்கு எதிராக இந்த கையெழுத்து வேட்டையை நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

இதிலே ஒரு இலட்சம் கையெழுத்துகளுக்குமேல் வாங்கி, தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை அடக்கவேண்டும் என்ற நோக்கோடு உச்ச நீதிமன்னில் வழக்கொன்றைத் தொடர்வதற்காக இந்த கையெழுத்து வேட்டை இடம்பெறுகின்றது.

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் எங்களுடைய அப்பாவி மீனவர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

இம்முறைக்குரிய இறால் பருவகாலம் அண்மித்துள்ள நிலையில், இந்திய இழவைப்படகுகள் மற்றும், தென்னிலங்கை இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளால் எமது மீனவர்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துமீறிய மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நீக்குவதற்கும், நிறுத்துவதற்கும் அரசு ஒத்துழைப்புத்தரவேண்டும்.

குறிப்பாக சுட்டிக்காட்டுவதெனில், சட்டவிரோத சுருக்குவலை பயன்பாடு என்பது எமது அப்பாவி மீனவர்களுக்கு சுருக்கு கயிற்றைப்போன்றது. அவர்களுடைய வாழ்வாதாரத்தில் சுருக்குக் கயிற்றைப்போன்றது.

அப்படியான சட்டவிரோத தொழில்களென இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட தொழில்ளை தடைசெய்யவேண்டும் என்பதுதான் இந்த மீனவர்களின் கோரிக்கையாகும்.

எமது மீனவர்களின் இந்தக் கோரிக்கை வலுப்பெறவேண்டும். நிச்சயமாக உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் தலையிட்டு சட்டவிரோதமான, தடைசெய்யப்பட்ட கடற்றொழில் செயற்பாடுகள் அனைத்தையும் நிறத்துவதற்கும், இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்பரப்பினுள் வருகைதந்து தொழில் செய்வதைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.