அக்கரைப்பற்று பொலிசாரின் அதிரடி 3320 மில்லிகிறாம் ஹெறோயின் போதைப்பொருளும் கைப்பற்றல்

வி.சுகிர்தகுமார் .
  அக்கரைப்பற்று பொலிசாரின் அதிரடி நடவடிக்கை காரணமாக மட்டு அம்பாரை மாவட்டங்களில் பல வருடங்களாக 23 இற்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் சுமார் 25 பவுண் தங்க நகைகளும் ஒரு ஆட்டோ உள்ளிட்ட மூன்று மோட்டார் சைக்கிளும் 3320 மில்லிகிறாம் ஹெறோயின் போதைப்பொருளும் கொள்ளையிட பயன்படுத்திய ஆடைகளும் மணிக்கூடு ஒன்றும் பொலிசாரால்  கைப்பற்றப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசாரி தெரிவித்தனர்.
கடந்த பல வருடங்களாக அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மிகவும் சூட்சுமமான முறையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இறக்காமம் வாங்காமப்பிரதேசத்தை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யு.எம்.எஸ்.டி.விஜயதுங்கவின் நேரடி கண்காணிப்பில் பெருங்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீத் தலைமையிலான பொலிசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை காரணமாகவே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மிகவும் சாதூர்யமான முறையில் தனியாக செல்லும் பெண்களின் நகைகளை கொள்ளையிடுவதுடன் இதற்காக வௌ;வேறு மோட்டார் சைக்கிள்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர். இவ்வாறு கொள்ளையிடும் பொருட்களை விற்று அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் சூதாட்டம் போன்ற செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். ஆயினும் பொலிசாரின் கண்களில் சிக்காமல் மறைந்திருந்த நிலையில் பொலிசாரும் குற்றவாளிகளை வலை விரித்து தொடர்ந்தும் தேடி வந்தனர்.
இந்நிலையில் குறித்த நபர்கள் இருவரும் இறக்காமம் வாங்காமப்பிரதேசத்தில் மறைந்திருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதிமன்றில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஆஜர்படுத்தி 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியையும் பெற்றிருந்தனர்.
இதனையடுத்து தடுத்து வைத்திருந்த இருவரையும் விசாரணை செய்த நிலையில் கொள்ளைச்சம்பவத்திற்கு பயன்படுத்திய ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட களவாடப்பட்ட இரு மோட்டார் சைக்கிளும் சுமார் 25 பவுண் நகையும் 3320 மில்லிகிறாம் ஹெறோயின் போதைப்பொருளும் ஆடைகளும் கைப்பற்றப்பட்டன.
குறித்த கொள்ளை சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு ஏறாவூர் காத்தான்குடி களுவாஞ்சிக்குடி மற்றும் அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று திருக்கோவில் கல்முனை சம்மாந்துறை சவளக்கடை மத்திய முகாம் உகன போன்ற பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேநேரம் குற்றங்களுடன் சம்மந்தப்பட்ட இருவரையும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசார் இன்று நடவடிக்கை எடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்று உள்ளிட்ட பல பிரதேசங்களில் தொடர் கொள்ளைச்சம்பவங்கள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த இருவரையும் கைது செய்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பெருங்குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரை பொதுமக்கள் பாராட்டுவதுடன் சற்று மனநிம்மதியும் அடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்