அம்பாறை மாவட்ட காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ஹரீஸ் எம்.பி பாராளுமன்றில் குரலெழுப்பினார் : விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பிலும் எடுத்துரைப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் காணப்படும் தோணிக்கல் 370 ஏக்கர், வட்டமடு புதுக்கண்டம் -185 ஏக்கர், வட்டமடு வேப்பையடி -195 ஏக்கர், வட்டமடு 444 ஏக்கர்  காணிகளை விவசாயம் செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.  இதனால் காணிச்சொந்தக்காரர்கள் 40 வருடங்களாக LDO பெர்மிட்களை கொண்ட இக்காணிகளை அக்கரைப்பற்று கிழக்கு கமநலசேவை மத்திய நிலையம் தனது PLR ல் பதிந்து உரமானியங்கள் வழங்கி வருகின்ற போதும்  2016 ம் ஆண்டுக்கு பின்னர் இக்காணிகளை விவசாயம் செய்யாமல் வன இலாகாவினால் மறுக்கப்பட்டு உரமானியங்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த காணி சொந்தக்காரர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஜீவோனோபாயம் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பான அமைச்சர் சீ.வி ரத்நாயக்கா மற்றும் இராஜாங்க அமைச்சர் விமலவிர திசாநாயக்க ஆகியோர் சபையில் இருக்கின்றீர்கள். வட்டமடு பிரச்சினை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விமலவிர திசாநாயக்க நன்றாக அறிந்து வைத்துள்ளார். இப்பிரச்சினைகளை தீர்க்க வன இலாகா அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.

வன இலாகா அமைச்சின் திருத்தம் சம்பந்தமான பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும் பொது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர், வன இலாகா அமைச்சின் இராஜாங்க அமைச்சர் அம்பாறையை சேர்ந்தவர். எங்களின் மாவட்டடத்தில் திருக்கோவில், லகுகல பிரதேசத்தில் கடந்த 60 வருடங்களாக விவசாயம் செய்த காணிகளை உள்ளடக்கி 2010.10.01 அன்று கணனி தொழிநுட்பத்தை (சட்டர்லைட் வரைபடம்) பயன்படுத்தி 1673/45 ம் இலக்க வர்த்தமானி அறிவிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன்காரணமாக 200 வருடகாலமாக தமன பிரதேசத்தில் இருந்த குடியிருக்கு பிரதேசங்கள் உட்பட ஏனைய காணிகளும் வன இலாகா பிரதேசத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளது. இதனால் 1000 கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தவறை உணர்ந்து வன இலாகா திணைக்களம் திருக்கோவில், லகுகல பிரதேசத்திற்கு உட்பட்ட தொனிக்கல், பெரிய துளாவ, கஞ்சிகுடிச்சாரு, தாரம்பலை, பக்மிடியாவ, போன்ற பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைக்காக அனுமதி வழங்கியிருந்தது.

இப்பகுதியில் கால்நடைகள் போன்றவற்றுக்கான  மேய்ச்சல் தரை பிரச்சினைகளும் காணப்படுகின்றன இதுவொரு சிறிய பிரச்சினையாகும் இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை நாம் ஊக்குவிக்கின்றபோது விவசாயக்கனிகள் பயிர் செய்யப்படாமல் இருபது பெரும் வேதனையான விடயமாகும். ஆகவே இதற்கான தீர்வு உரிய அதிகாரிகள் மற்றும்  சம்பந்தப்பட்டவர்கள் இருந்து பேசி விவசாயக்காணிகளை வனவிலாக பகுதிகளிலிருந்து விடுவிப்பதோடு கால் நடைகளுக்குகான மேய்சல் தரைக்கு  சுமார் 500 ஏக்கரில் வன இலாகா பகுதியிலிருந்து  இடம் ஒதுக்குவதன் மூலம் இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரலாம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம். ஆகவே இதற்கான ஒரு குழுவினை அமைக்க அமைச்சரை வேண்டிக் கொள்கின்றேன்.

இவ்விடயம் தொடர்பில் சபையில் அமர்ந்திருந்த இராஜாங்க அமைச்சர் விமலவிர திசாநாயக்க பாராளுமன்ற உறுப்பினரின் கேள்விகளுக்கு பதிலளித்ததுடன், காணிதொடர்பில் விளக்கம் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்