நுவரெலியா – நானுஓயா பகுதியில் வாகன விபத்து – ஒருவர் படுங்காயம்.

(க.கிஷாந்தன்)

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் 08.12.2021 காலை 9 மணியளவில் கனரக டிப்பர் லொறி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்குராங்கெத்த ஹேவாஹெட்ட பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்ற கார் ஒன்றும் தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதிக்கு சென்ற கனரக டிப்பர் லொறி ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் ஒருவர் படுங்காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கனரக டிப்பர் லொறியின் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாது போனதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளன.

லொறியின் சாரதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்