ஒரு தேர்தலை வைக்கக் கூடிய நிலைமையில் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் இல்லை, அரசியல் ரீதியாகவும் இல்லை… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா)

வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நிதி அமைச்சர் கடன் கேட்டு இந்தியாவிற்குச் செல்லும் நிலைமை தான் தற்போது நாட்டில் இருக்கின்றது. ஒரு தேர்தலை வைக்கக் கூடிய நிலைமையில் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் இல்லை, அரசியல் ரீதியாகவும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தற்போது நான்கு வருடங்களுக்கு மேலாகின்றது. வடக்கு மாகாணசபையும் கலைக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு மேலாகின்றது. அதேபோன்று அனைத்து மாகாணசபைகளும் கலைக்கப்பட்டுள்ளன. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, சுகாதர நிலைமை என்பன வெளிப்படையான விடயம்.

நாட்டின் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நிதி அமைச்சர் கடன் கேட்டு இந்தியாவிற்குச் செல்லும் நிலைமை தான் நாட்டின் தற்போதைய நிலையாக இருக்கின்றது. வரவு செலவுத் திட்ட விவாதம் நடக்கும் போது நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருக்க வேண்டிய நிலையில் அவர் கடன் கேட்டு வெளிநாடு செல்கின்றார்.

கடந்த வருடம் இந்த நாட்டை விட படுமோசமாக இருந்த பங்களாதேசிடம் இலங்கை அரசாங்கம் கடன் வாங்கியிருக்கின்றது. இந்த நிலையில் மாகாணசபைத் தேர்தலையோ இன்னுமொரு தேர்தலையோ வைக்கக்கூடிய நிலைமை இந்த அரசாங்கத்திடம் இல்லை.

வருகின்ற வருடம் மார்ச் மாதத்துடன் உள்ளுராட்சி மன்றங்களும் கலைக்கப்படலாம். சிலவேளைகளில் தேர்தல் நடத்த முடியாவிட்டால் உள்ளுராட்சி சட்டத்தின் படி ஒரு வருடங்கள் நீடிக்கக் கூடிய நிலைமையும் ஏற்படலாம் அல்லது உள்ளுராட்சி மன்றங்களையும் கலைகத்து விட்டு உறுப்பினர்களுக்கான நிதியையும் மீதப்படுத்துகின்றோம் என்ற பெயரில் ஆணையாளர், செயலாளர்களுக்குக் கீழ் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களைக் கொண்டு வரலாம். எதுவும் எந்த நேரமும் நடக்கும்.

ஆனால் ஒரு தேர்தலை வைக்கக் கூடிய நிலைமையில் இந்த அரசாங்கம் பொருளாதார ரீதியாகவும் இல்லை, அரசியல் ரீதியாகவும் பலமிழந்த நிலையில் இருக்கின்றது. அந்த விடயம் அரசாங்கத்திற்கே தெரியும். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தில் இருக்கின்ற சில அமைச்சர்கள் கூட இதனை ஒத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் அரசாங்கம் தேர்தலுக்குச் செல்லாது.

ஆனால் மகாணசபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று நாங்கள் மிக உறுதியாக இருக்கின்றோம். நேற்றைய தினம் கூட வடக்கு கிழக்கில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் பேசும் கட்சிகள் அதாவது இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வரவேற்றும் 13வது திருத்தச் சட்டத்தை இனப்பிரச்சனைக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக ஏற்றுக் கொண்ட கட்சிகள் கூடிக் கலந்துரையாடியிருந்தோம்.

இந்தியா மூலமாக மகாணசபைத் தேர்தல் தொடர்பில் இலங்கைக்கு ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும், மாகாண சபைகளுக்கு உரிய முழுமையான அதிகாரங்களைக் கொடுத்து அந்தத் தேர்தலை வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினையும் இந்தியாவிற்கு விடுத்திருக்கின்றோம்.

மாகாணசபைத் தேர்தல் நடைபெற்று மாகாணசபை முழு அதிகாரங்களுடன் இருக்குமாக இருந்தால் எமது ஊழியர்கள் இவ்வாறு ஐந்து, ஆறு வருடங்கள் தற்காலிய, அமைய தொழிலாளர்களாக வேலை செய்யக் கூடிய நிலைமை இருக்காது. மாகாணசபைகளுக்கு தற்போது இருக்கும் அதிகாரங்களின் அடிப்படையில் மாகாணசபை நினைத்தால் கூட ஊழியர்களை நிரந்தரமாக்க முடியாது. ஏனெனில் மாகாணசபைகளின் ஊழியர்களுக்கான சம்பளம் மத்திய அரசின் திறைசேரியில் இருந்து தான் வர வேண்டும். திறைசேரியின் அனுமதியைப் பெற்று நியமனம் வழங்கக் கூடிய விதத்திலேயே தற்போதைய மாகாணசபையின் அதிகாரம் இருக்கின்றது.

எனவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாணசபைகளுக்கு எவ்வாறு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தனவோ அந்த அதிகாரங்கள் அனைத்தையும் உள்வாங்கி அதிகாரங்களைப் பரவலாக்கி இந்த மாகாணசபைத் தேர்தல் வைக்கப்படல் வேண்டும். அவ்வாறான தொரு நிலைமை வருமாக இருந்தால் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு வரும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.