மதவளசிங்கன் குளத்தில் ‘நாகச்சோலை ஒதுக்க வனத்திற்காக’ 6,825ஹெக்டயர் நிலப்பரப்பை அபகரித்துள்ள வனவளத் திணைக்களம்; கிராம மக்கள் அதிர்ப்தி

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, மதவளசிங்கன்குளம் கிராமசேவகர் பிரிவில் 6,825ஹெக்டயர் நிலப்பரப்பினை வனவளத் திணைக்களம் புதிதாக அபகரிப்புச்செய்துள்ளது.

வனவளத்திணைக்களத்தின் இச்செயற்பாட்டிற்கு அப்பகுதி பொதுமக்களும், பொது அமைப்புக்களும் தமது அதிர்ப்தியை வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இவ்வாறு அபகரிப்புச்செய்யப்பட்ட பகுதியில் வனவளத் திணைக்களம் அண்மையில் பெயர்ப் பலகை ஒன்றினை நாட்டியுள்ளது.

குறித்த பெயர்ப்பலகையில், நாகச்சோலை ஒதுக்கப்பட்ட வனம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அப் பகுதியின் மொத்தப் பரப்பளவு 6,825ஹெக்டயர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த வனப் பகுதிக்குள் அனுமதியின்றி நுழையக்கூடாதெனவும், அப் பகுதிக்குள் வனப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களைப் புரிதல் தண்டனைக்குரிய குற்றமெனவும், வனப்பாதுகாப்பு  கட்டளையின்கீழ் தண்டனை வழங்கப்படும் எனவும் அந்த அறிவிப்பு பலகையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் இவ்வாறு வனவளத் திணைக்களத்தினால் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பானது, ஏற்கனவே மக்களுக்கு வழங்கப்பட்ட பகுதி என மதவளசிங்கன்குளம் பகுதி பொதுஅமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு வனவளத்திணைக்களம் இவ்வாறு புதிதாக பெயர்பலகை நாட்டும்போது தமக்கு எவ்வித அறிவித்தலும் வழங்கவில்லை என்பதுடன், தம்மோடு எவ்வித கலந்துரையாடல்களிலும் ஈடுபடவில்லை எனவும் மதவளசிங்கன்குளம் பொதுமக்களும், பொது அமைப்புக்களும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்கின்றன.

மேலும் இப் பிரச்சினை தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளருடன் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளதாக மதவளசிங்கன்குளம் கிராம பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.