அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரின் செயலைக் கண்டித்து லிந்துலையில் போராட்டம்

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளர், மக்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார் எனவும், பஸ் தரிப்பிடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வியாபார நோக்கில் கடைகளை அமைக்கின்றார் எனவும் குற்றஞ்சாட்டி,  அதற்கு எதிராக தொழிலாளர் தேசிய சங்கத்தின் அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர்களும், பிரதேச மக்களும் இன்று (16.12.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எனினும், இந்த குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்துள்ள பிரதேச சபையின் தவிசாளர் கதிர்ச்செல்வன்,  மக்களுக்கான பஸ் தரிப்பிடமே அமைக்கப்படுவதாகவும், எஞ்சிய இடத்திலேயே சட்டப்பூர்வமான அனுமதியுடன் மக்கள் நலன் கருதி கடைகள் நிர்மாணிக்கப்படுகின்றன எனவும் அவர் கூறினார்.

அக்கரபத்தனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற வேளையிலேயே, லிந்துலை நாகசேனையில் உள்ள சபைக்கு முன்னாள் பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும், சபை தவிசாளரின் செயலைக் கண்டித்தும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் உறுப்பினர் வே.சிவானந்தன், மற்றும் உறுப்பினர் எஸ்.சுதாகர் ஆகிய இருவருமே இவ்வாறு வெளிநடப்பு செய்தனர்.

” அக்கரபத்தனை, மன்றாசி நகரிலுள்ள புதிய பாலத்துக்கு அருகில் பஸ் தரிப்பிடம் அமைப்பதற்காகவே  அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பஸ் தரிப்பிடம் அமைக்காமல், தனக்கும் தனது சகாக்களுக்கும் தவிசாளர் கடைகளை அமைத்து வருகின்றார். சட்டவிரோதமாகவே இதற்கான நடவடிக்கை இடம்பெறுகின்றது. தோட்ட அனுமதியின்றி காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.” – என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கட்டாயம் பஸ் தரப்பிடம் அமைக்கப்பட வேண்டும், மக்களின் வரிப்பணத்தை தவிசாளர் முறையாக பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

அதேவேளை, இது தொடர்பில் பிரதேச சபையின் தவிசாளரிடம் வினவியபோது,

” பஸ் தரிப்பிடமே உரிய அனுமதியுடன் அமைக்கப்பட்டு வருகின்றது. எஞ்சிய இடத்தில்தான் மக்களின் நலன் கருதி கடைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கு சட்டப்பூர்வமான அனைத்து அனுமதியும் உள்ளது. தேவையான ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன.

எனினும், எதிரணியிலுள்ள இருவரே இதனை குழப்பும் நோக்கில் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர். அனைத்து ஆவணங்களும் சட்டப்பூர்வமாகவே உள்ளன. எனவே, சவால்களை எதிர்கொள்ள நான் தயார்.” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.