தொழிலாளர்கள் திங்கள் முதல் வேலைக்கு திரும்புவதற்கு தீர்மானம் – உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எமது தொழிற்சங்க நடவடிக்கையும் கடுமையாகவே அமையும் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்)

” இப்போதுதான் தொழிற்சங்க ஆட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இனி போக, போக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அக்கரபத்தனை பிளான்டேசனால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எமது தொழிற்சங்க நடவடிக்கையும் கடுமையாகவே அமையும் .”  – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், நாளை (20.12.2021) திங்கட்கிழமை முதல் பணிக்கு திரும்புவார்கள் எனவும், நிர்வாகத்திடமிருந்து எழுத்து மூல உத்தரவாதம் கோரப்பட்டுள்ளதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாக பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நிர்வாகங்களின் கெடுபிடிகளுக்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுமே அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இ.தொ.கா. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தன.

இது தொடர்பில் அட்டனிலுள்ள தொழில் திணைக்களத்தின் அலுவலகத்தில் பேச்சுவார்த்தையும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் அக்கரபத்தனை, டயகம ஆகிய தோட்டங்களுக்கு நேற்று (18.12.2021) பயணம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இதொகா பிரமுகர்கள், தொழிலாளர்களுடன் அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடினர். நிர்வாகத் தரப்பில் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் பற்றியும் விவரித்தனர்.

அந்தவகையில் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடுவதற்கும், திங்கள் முதல் வேலைக்கு திரும்புவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியவை வருமாறு,

“அக்கரபத்தனை பிளான்டேசன், தொழிலாளர்களை மிகவும் மோசமாக நடத்தியுள்ளது. ஈ.டிஎவ், ஈ.பி.எவ் போன்ற  கட்டணங்களும் செலுத்தப்படாமல் உள்ளன. தொழிலாளர்கள் கூடுதல் கொழுந்து பறிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.  இதற்கு எதிராக நாம் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்தோம். இதற்கு ஏனைய தொழிற்சங்கங்களின் தலைவர் மார் முழுமையான ஆதரவை வழங்கினர். அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தோட்டத் தொழிலாளர்களை நெருக்கடிக்குள் தள்ளாமல் வீட்டில் இருந்து போராடுமாறு நாம் அழைப்பு விடுத்தோம். மற்றையவர்கள் போல மக்களை வீதிக்கு இறக்கி கொரோனா பரப்பவில்லை. அப்படி இருந்தும் நாங்கள் நாடகமாடுவதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கமாட்டோம். ஏனெனில் இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் விமர்சிப்பதில்லை என முடிவெடுத்துள்ளோம். மற்றையவர்களை தாக்கி பேசி, விமர்சனங்களை முன்வைப்பதற்காக மக்கள் எம்மை நாடாளுமன்றம் அனுப்புவும் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களின் ஈ.பி.எவ், ஈ.டி.எவ் உள்ளிட்ட கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும், அதற்கான கால எல்லையுடன் வரைவு திட்டத்தை முன்வைக்குமாறு வலியுறுத்தியுள்ளோம். அதேபோல ஈ.பி.எவ், ஈ.டி.எவ் உள்ளிட்ட கொடுப்பனவுகளை எடுக்காமல் உயிரிழந்தவர்களின் கொடுப்பனவுகள், அவர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கான முன்மொழிவும் அவசியம்.

அதேபோல பறிக்கப்படும் கொழுந்தின் அளவில் அதிகரிப்பு இடம்பெறக்கூடாது, கழிபடும் கிலோ அளவும் குறைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளோம். இதற்கு நிர்வாகத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். வாய்மூல உத்தரவாதத்தை நம்ப முடியாது. எனவே, எழுத்துமூல உத்தரவாதம் அவசியம். அதனை கோரியுள்ளோம்.

எனவே, திங்கள் முதல் தொழிலாளர்கள் வேலைக்கு செல்வார்கள். சம அளவில்தான் கொழுந்து பறிப்பார்கள். நிர்வாகம் எமக்கு வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாவிட்டால், தொழிலாளர்கள் வேலைக்கு செல்வார்கள், ஆனால் அக்கரபத்தனையை விட்டு கொழுந்து வெளியே செல்லாது என்பதை கூறிவைக்க விரும்புகின்றோம். அதேபோல எமது தொழிற்சங்க நடவடிக்கையும் கடுமையாக இருக்கும். எழுத்துமூல உத்தரவாதம் கிட்டும் வரை இது விடயத்தில் வெற்றியென நாம் கருதமாட்டோம். ” – என்றார். 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.