மாநில அளவில் முதலிடம் வென்றார் பரங்கிப்பேட்டை மாணவர்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (தமிழ்நாடு & புதுச்சேரி) அமைப்பின் பாலர் சங்கம் சார்பில் நடந்த மாநில அளவிலான இணையவழி கிராஅத் போட்டியில் பரங்கிப்பேட்டை மாணவர் க.அ. முஹம்மது தல்ஹா முதலிடம் பிடித்தார்.
கொரோனா காலத்தை திருக்குர்ஆனுடன் பயணிக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் பாலர் சங்கம் சார்பில் இணைய வழியில் ஏற்பாடு செய்யப்பட்டன. இதையொட்டி தமிழ்நாடு & புதுச்சேரி மாநில அளவில் வெளிநாடு வாழ் பிள்ளைகளும் பங்கேற்கும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிராஅத் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வெளிநாடு வாழ் மாணவ, மாணவியர் உட்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டிக்கு முப்பது நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் பரங்கிப்பேட்டை மாணவர் க.அ. முஹம்மது தல்ஹா முதலிடம் பிடித்தார். அவருக்கான வெற்றிக் கேடயம், பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒரு ஆண்டிற்கான சந்தாவுடன் இளம்பிறை தமிழ் சிறார் மாத இதழின் பாராட்டுக் கடிதம் அனைத்தும் அஞ்சல் வழியாக கிடைத்தன.
இவர் சமூக ஆர்வலர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ அவர்களின் மகனார் ஆவார். பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியின் மஹ்மூதிய்யா ஹிஃப்ழ் மதரஸாவில் திருக்குர்ஆன் மனனம் செய்வதை துவக்கிய இவர், தற்போது இராஜகிரி அதாயி ஹிஃப்ழ் மதரஸாவில் திருக்குர்ஆனை மனனம் செய்து வருகிறார். அங்குள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பும் படிக்கிறார். இதற்கு முன் கிராஅத், அறிவியல், விளையாட்டு, வினாடி வினா, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளையும், பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறார்.
இறையருளால் இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்