கல்முனை சந்தாங்கேணி மைதான உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணத்தை துரிதப்படுத்த நடவடிக்கை.

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற உள்ளக விளையாட்டரங்கின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வேலைத் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (28) கல்முனை மாநகர சபையில், மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஷிபான் மஹ்ரூப், வேலைத்திட்ட ஒப்பந்த நிறுவனமான மத்திய பொறியியல் நிபுணத்துவப் பணியகத்தின் (CECB) பொறியியலாளர் ரி.ராசநாயகம், கல்முனை மாநகர சபையின் பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சினால் நிதியொதுக்கீடு செய்யப்பட்ட குறித்த வேலைத்திட்டமானது மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவது தொடர்பில் கல்முனை மாநகர முதல்வர் மற்றும் அமைச்சர் நாமலின் சட்ட ஆலோசகர் ஆகியோர் இதன்போது ஒப்பந்த நிறுவனத்தினரிடம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டனர்.

இன்னும் இன்னும் காலத்தை இழுத்துக் கொண்டு செல்லபடுவதை அனுமதிக்க முடியாது. கூடிய விரைவில் இதனை பூர்த்தி செய்துவதற்கு ஒப்பந்த நிறுவனம் துரித கதியில் வேலைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தினர்.

இவ்வேலைத் திட்டத்தை இனிவரும் நாட்களில் துரிதபடுத்துவதற்கும் எதிர்வரும் 06 மாத காலத்திற்குள் இதன் முதற்கட்டப் பணியை பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்ட கால அட்டவணையை விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் மாநகர முதல்வர் ஆகியோருக்கு ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிப்பதற்கும் முன்னேற்ற மீளாய்வு அறிக்கைகளை உடனுக்குடன் அனுப்பி வைப்பதற்கும் சி.ஈ.சி.பி.நிறுவனப் பொறியியலாளர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.

முதற்கட்டப் பணிகள் தாமதமடைந்துள்ளதால் இவ்வேலைத் திட்டத்திற்கான 2022ஆம் ஆண்டுக்குரிய நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டிய விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் சட்ட ஆலோசகர் ஷிபான் மஹ்ரூப், 2023ஆம் ஆண்டுக்குரிய நிதியொதுக்கீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் முதற்கட்டப் பணிகள் விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராக பதவி வகித்தபோது, கடந்த 2018ஆம் ஆண்டு இவ்வேலைத்திட்டத்திற்கான நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் அடிக்கல் நடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்