சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை

(அஸ்லம் எஸ்.மௌலானா)

திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸாருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 45ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று புதன்கிழமை (29) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றபோதே இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சந்திரசேகரம் இராஜன் இப்பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார்.

மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த 04 பொலிஸாரில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் எமது பாண்டிருப்பு பிரதேசத்தை சேர்ந்த அழகரெத்தினம் நவீனன் எனும் இளைஞன் மிகவும் துடிப்புள்ள, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வந்த ஒருவர் எனவும் இவரது இழப்பு என்பது எவராலும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறே ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த அப்துல் காதர் எனும் பொலிஸ் உத்தியோகத்தரும் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றிருந்த ஒருவர் எனவும் மேலும் இரண்டு சிங்கள பொலிஸார் உட்பட இந்நால்வரின் குடும்பத்தினரும் இவர்களின் இழப்பினால் துன்புற்று அவஸ்தைப்பட்டதை நேரடியாகக் கண்டு மிகவும் கவலையடைந்துள்ளேன் எனவும் உறுப்பினர் இராஜன் இதன்போது குறிப்பிட்டார்.

இந்த அனுதாபப் பிரேரணையை மாநகர சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன் வழிமொழிந்து ஆதரித்தார்.

இதையடுத்து இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவித்த மாநகர முதலவர் ஏ.எம்.றகீப், இந்த அனுதாபத் தீர்மானத்தை குறித்த சம்பவத்தில் உயிர்நீத்த நான்கு பொலிஸாரினதும் குடும்பத்தினருக்கு அனுப்பி வைக்குமாறு சபைச் செயலாளரை அறிவுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.