வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 85 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!!

வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 85 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!!
எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மாத்திரம் 85 ஆயிரம் மில்லியன் நிதி எமது அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பில் இன்று (31) இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.
சுபீட்சத்தின்பால் நாட்டை கட்டியெலுப்பும் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக  பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு, சிறு பொருளாதாரப் பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறுபட்ட வாழ்வாதார உதவி திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் வழங்கப்பட்டுவரும் நிலையில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்கான பல்வேறுபட்ட உதவித்திட்டங்களை வழங்கும்  நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்ததுடன், உதவித்திட்டங்களையும் வழங்கிவைத்துள்ளார்.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட  தெரிவுசெய்யப்பட்ட  பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவி திட்டங்கள், மைதான புனரமைப்பு மற்றும் வீடமைப்பு திட்டங்களுக்கான  உதவித்திட்டங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள், மண்முனை மேற்கு  பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முற்போக்கு தமிழர் கழகத்தின் பிரதிநிதிகள், கிராமிய அமைப்புக்கள் மற்றும் விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது தனிநபர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடுகள் வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட 59 பயனாளிகளுள் இரண்டாம் கட்டமாக  30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடுகள் உள்ளிட்ட மருந்து வகைகள் 17 பயனாளிகளுக்கும், வீடு திருத்தம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட 12 பயனாளிகளுக்கு 24 இலட்சம் பெறுமதியான காசோலைகளும்,
மலசலகூட வசதியற்ற 18 பயனாளிகளுக்காக 1,260,000  ரூபாய்
பெறுமதியான காசோலைகளும்
இதன்போது இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், மின் இணைப்பு அற்ற வறிய குடும்பங்களிற்கு மின் இணைப்பை பெற்றுக்கொள்வதற்காக 18 பயனாளிகளுக்கு 4,20,000 ரூபாய்
பெறுமதியான காசோலைகளும்,
 3 மைதானங்களின் புனரமைப்பிற்காக 15 இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் இதன்போது இராஜாங்க அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த தேர்தலில் ஆளும் தரப்பு சார்பில் போட்டியிட்ட நான் உட்பட எமது மாவட்டத்தில் இரண்டு பேரை எமது மக்கள் தங்களது பொன்னான வாக்குகளை வழங்கி தேர்ந்தெடுத்து ஆளுந்தரப்பு சார்பில் பாராளுமன்றத்திற்கு அனுப்பியதன் பயனாலேயே  இன்று  எமது மக்களுக்காக இந்த அரசாங்கத்தின் ஊடாக பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை நாம் ஆற்றிவருகின்றோம், எதிர்காலத்திலும்
வாழ்வாதார உதவி திட்டங்கள் உள்ளிட்ட எமது மக்களுக்கு தேவையாகவுள்ள அனைத்து விதமான தேவைப்பாடுகளையும் பெற்றுக்கொடுப்பதற்காக முன்னின்று செயற்படுவோமென்றும்,
இந்த அரசாங்கம் ஒருபோதும் இல்லாதவாறு எதிர்வரும் ஆண்டில் வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மாத்திரம் 85 ஆயிரம் மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதெனவும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்  இதன்போது தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்