கல்முனை வாகன தரிப்பிட சர்ச்சைக்கு பொதுச்சந்தை வர்த்தக சங்கம் விளக்கம் : ஓரிடத்தில் மட்டும் கட்டணம் செலுத்த முடியும் என அறிவிப்பு

கல்முனை ஸாஹிரா கல்லூரி சந்தி முதல் கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் சந்திவரை ஒருவரும், கடற்கரைப்பள்ளி சந்தி முதல் தாளவாட்டுவான் சந்திவரை ஒருவரும், கல்முனை பொதுச்சந்தை வாகன தரிப்பிடங்களை ஒருவருமாக குறித்த பிரதேசங்களில் மூவர் வாகன தரிப்பிடங்களை குத்தகைக்கு எடுத்திருந்தாலும் அந்த பிரதேசங்களில் ஒருவர் ஒரு நாளில் ஓரிடத்தில் மாத்திரம் தரிப்பிட கட்டணம் செலுத்தி பற்றுசீட்டை பெற்றுக்கொள்வது போதுமானதாக தீர்மானம் எடுத்துள்ளதாக கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர் ஊடக அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை மாநகர சபையின் கீழுள்ள பல இடங்களில் வாகன தரிப்பிட அறவீடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது. கல்முனை மாநகர முதல்வரின் அலுவலகத்தில் கல்முனை மாநகர முதல்வர், ஆணையாளர், கணக்காளர், மாநகர சபை உத்தியோகத்தர்கள்,  கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க பிரதிநிதிகள், குத்தகைக்காரர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு பேசி எடுத்த தீர்மானமாகவே அது அமைந்துள்ளது. அதனடிப்படையில் வாகன சாரதிகள் குறித்த இடங்களில் ஓரிடத்தில் மட்டும் வாகன தரிப்பிட கட்டணத்தை செலுத்தி பற்றுசீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இது தொடர்பில் எழும் முரண்பாடுகளை பற்றி கல்முனை மாநகர சபைக்கு அறிவிக்க முடியும்.

அதனடிப்படையில் முச்சக்கரவண்டிக்கு 20 ரூபாவும், கார், வேன் போன்ற வாகனங்களுக்கு 50 ரூபாவும், கனரக வாகனங்களுக்கு 100 ரூபாவும் அறவிடுவது என்று தீர்மானித்து அதற்கான பொதுவான பற்றுசீட்டை கல்முனை மாநகர சபை திகதி, வாகன இலக்கத்துடன் வழங்கக்கூடியதாக வடிவமைத்து கொடுப்பது என்றும், அந்த பற்றுசீட்டில் ஆணையாளர் அல்லது கணக்காளரின் ஒப்பம் இடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.