பட்டதாரி நியமனத்தில் புதிய தேசிய பாடசாலைகளுக்கு அநீதி…

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் விடயத்தில் புதிதாக தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய பயிலுனர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.முஹம்மது முக்தார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் பட்டதாரி பயிலுனர்களில் பெரும்பாலானோர் அவரவர் கடமையாற்றும் பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் பயிலுனர்களாக கடமையாற்றிய பட்டதாரி பயிலுனர்களில் பெரும்பாலானோர் அப்பாடசாலைகளிலேயே அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஆனால், ஆயிரம் பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் வேலைத் திட்டத்தின் கீழ் அண்மையில் கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றிய பட்டதாரி பயிலுனர்கள் மட்டும் அங்கிருந்து அகற்றப்பட்டு, வேறு திணைக்களங்களுக்கு நிரந்தர நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது இவர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் பெரும் அநீதியாகும்.

மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவது தொடர்பான கல்வியமைச்சின் நிலையியல் கட்டளை 50 இற்கு அமைவாக தேசிய பாடசாலையாக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கு பின்னரே அவை முழுமையான தேசிய பாடசாலை வலையமைப்பிற்குள் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது. அதுவரை தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மாகாண கல்வி திணைக்களத்தினாலேயே நிருவாகம் செய்யப்படும்.

இதன் அடிப்படையில் கிழக்கில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றி வந்த பட்டதாரி பயிலுனர்கள் அப்பாடசாலைகளிலேயே நிரந்தரமாக்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் விரும்பினால் மாத்திரமே வேறு திணைக்களங்களுக்கு இணைக்கப்படல் வேண்டும். ஏனைய மாகாணங்களில் இந்நடைமுறை பின்பற்றப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் இதற்கு மாற்றமான நடைமுறையை பின்பற்றப்பட்டிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.