வைத்தியர் சுகுணன், இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதில் அதிகளவு அக்கறை காட்டியவர்.

வைத்தியர் சுகுணன், இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதில் அதிகளவு அக்கறை காட்டியவர் : சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம்

வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் அவர்கள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளாராக பணியாற்றிய காலத்தில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்குச் செய்த பல்வேறு அபிவிருத்திகள் காரணமாக அவர் இவ்வைத்தியசாலை வரலாற்றில் பேசப்பட வேண்டிய முக்கிய கதாபாத்திரம் என வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் வெளியிட்டுள்ள பாராட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதையிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில், சுகுணன் அவர்கள் இப்பிராந்தியத்தில் பணியாற்றிய காலத்தில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் இங்குள்ள வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதில் அதிகளவு அக்கறை காட்டியவர். இவரது காலப்பகுதியில் சாய்ந்தமருது வைத்தியசாலை குறிப்பிடத்தக்க பல்வேறு அடைவுகளை எட்டியுள்ளது.

பிரதேச வைத்தியசாலை தரம் பீ ஆக இயங்கிய வைத்தியசாலையை தரமுயர்த்தித் தருமாறு வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிருவாகிகள் மற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினர்கள் இணைந்து முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களிடம் கோரிக்கை முன்வைத்தது. இக்கோரிக்கைக்கு அமைய, ஆளுனரின் பணிப்புரையின் பிரகாரம் முன்னாள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. அலாவுதீன் அவர்கள் தரம் ஏ ஆக தரமுயர்த்தும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அவரது பதவிக் காலத்தின் பின்னர், இதற்குத் தேவையான ஆளணி மற்றும் வைத்திய உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதில் சுகுணன் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது. குறிப்பாக தற்போதைய அரசினால் நியமனம் செய்யப்பட்ட பலநோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்களை இவ்வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுத்து குறிப்பாக இங்கு தேவையாக இருந்த சுகாதார உதவியாளர்ளுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதவர் சுகுணன் அவர்களாவார்.

கடந்த காலங்களில் இங்கு காணப்பட்ட சில குறைபாடுகள் காரணமாக சிறிது காலம் இவ்வைத்தியசாலையை மக்கள் பயன்படுத்துவதில் மந்த நிலை காணப்பட்டது. வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் பிராந்திய பணிப்பாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய பல்வேறு வளங்கள் வழங்கப்பட்டன. அபிவிருத்தி விடயமாக இவரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்து பல உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததுடன் மட்டும் நின்றுவிடாது தனது பதவிக் காலத்தில் இவ்வைத்தியசாலையை பல்வேறு விடயங்களில் மேம்படுத்துவேன் என்ற உறுதிமொழியை வழங்கி அதனை செயலில் நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அண்மைக் காலமாக இவ்வைத்தியசாலை பல்வேறு சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றது.

மேலும், அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறை மேம்படுத்தல் திட்டத்தின் (PSSP) கீழ் சாய்ந்தமருது வைத்தியசாலையையும் உள்வாங்கி அதற்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கியதன் ஊடாக இப்பிரதேச மக்கள் பல்வேறு நன்மைகளை அடைவதற்கான வாய்ப்பை பிராந்திய பணிப்பாளர் அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். சுமார் 30 நிமிடங்களில் பல பரிசோதனைகளைச் செய்யக்கூடிய உபகரணம் இரண்டை மேற்படி திட்டத்தின் கீழ் வழங்கியதன் ஊடாக கடந்த காலங்ளில் இவ்வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் செய்ய முடியாதிருந்த பல பரிசோதனைகளைச் செய்யும் சந்தர்ப்பம் இவரால் கிடைக்கப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், அணி முகாமைத்துவம் மற்றும் நோயாளர்களை மையமாகக் கொண்ட சேவை வழங்கல் ஆகியவற்றில் திறன்களுடன் முதனிலை சுகாதார கவனிப்பை வழங்கள், வினைத்திறன் மிக்க வகையில் தொற்றா நோய்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துதல் மற்றும் முகாமைப்படுத்துதல், தொற்றா நோய்கள் நிகழ்ச்சித் திட்டத்திற்காக பொதுமக்களை அடிப்படையாகக் கொண்ட தகவல் முகாமைத்துவ முறைமையை ஸ்தாபித்தல் போன்ற சேவைகளை இதனூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடியதாவுள்ளது. அத்துடன், கொறோனா தொற்று தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில் பிராந்திய பணிப்பாளராக அவர் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் ஏனைய பிரதேசங்களை விட ஒப்பீட்டளவில் கல்முனைப் பிராந்தியம் குறைவான பாதிப்புகளை சந்திக்க நேர்ந்தமை அவரது சிறப்பான நிருவாகத்தை வெளிப்படுத்தியிருந்தது.

தனது பதவிக் காலத்தில் சாய்ந்தமருது வைத்தியசாலையை மட்டுமல்லாது இப்பிராந்தியத்தில் உள்ள பல்வேறு வைத்தியசாலைகளையும் மேம்படுத்திய வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் அவர்களின் சேவையால் கல்முனை பிராந்தியம் பயனடைந்தது போன்று மட்டக்களப்பு பிராந்தியமும் சுகாதார துறையில் உயர்வு பெறுவதற்கான சமிக்கையை அவரது நியமனம் வெளிப்படுத்துகின்றது என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்