இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விபத்துக் காப்புறுதியானது கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

•கலைஞர்களின் படைப்புகளினாலேயே வரலாறு வண்ணமயமானது.

•நாடகத் துறையிலிருந்து நாம் ஆரம்பித்த மருத்துவ உதவி விபத்துக் காப்புறுதி இன்று அனைத்து கலைஞர்களுக்குமான மாபெரும் படியாக மாறியுள்ளது.
•கலைஞர்களுக்கான தரவுத்தளத்தை உருவாக்கக் கிடைத்தமை பாரிய சாதனையாகும்.
•கலை படைப்புகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச மதிப்புகளை தேடித்தருவதற்கான ஒரு முயற்சி.

இலவசமாக வழங்கப்படும் மருத்துவ உதவி விபத்துக் காப்புறுதியானது கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசாகும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

கலைஞர்களுக்கான காப்புறுதி பத்திரம் வழங்கல், தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் www.heritage.gov.lk உத்தியோகப்பூர்வ இணையத்தளம் மற்றும் கலைஞர்களுக்கான தரவுத்தளம் வெளியீட்டு விழா நேற்று (20) அலரி மாளிகையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கௌரவ பிரதமரின் தலைமையில் கலைஞர்களுக்கான காப்புறுதி பத்திரம் வழங்கப்பட்டது. கௌரவ பிரதமர், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் நிசாந்தி ஜயசிங்க ஆகியோரும் காப்புறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சொஃப்ட்லொஜிக் காப்புறுதி நிறுவனத்தினால் வழங்கப்படும் 50 காப்புறுதி பத்திரங்கள் நேற்றைய தினம் கலைஞர்களுக்கு குறியீட்டு ரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.

தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் www.heritage.gov.lk உத்தியோகப்பூர்வ இணையத்தளம் இதன்போது கௌரவ பிரதமரின் தலைமையில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கலைஞர்களுக்கான தரவுத்தளம் வெளியிட்டு வைக்கப்பட்டு நடிகர் ரவீந்திர ரன்தெனிய மற்றும் நடனக் கலைஞர் கொடஹேவகே இராஜாங்க அமைச்சர் கொடஹேவகே கிரென்டின் சில்வா ஆகியோரின் தரவுகள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களினால் அங்கீகரிக்கப்பட்டு தரவுத்தளத்தில் உள்ளடக்கப்பட்டது.

கலைஞர்களுக்கான இலவச காப்புறுதி வழங்கல் மற்றும் அனைத்து கலைஞர்களுக்குமான தரவுத்தளத்தை ஆரம்பித்தல் ஆகியன தொடர்பில் கௌரவ பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு பல கலைஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

கலாசார பாரம்பரியம் நிறைந்த பெருமைமிக்க வரலாற்றை நமது நாடு கொண்டுள்ளது. உங்களைப் போன்ற கலைஞர்களின் படைப்புகளால் இந்த வரலாறு வண்ணமயமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு தேசமாக நாம் இன்னும் உலகின் முன் ஒரு சிறந்த கலாசாரத்திற்கு உரிமை கோரும் ஒரு தேசமாகும்.

இலக்கியம், நடனம், நாடகம், கலை, பொம்மலாட்டம், சிற்பம்,இசை மற்றும் சினிமா ஆகியவற்றின் மூலம் சமூக யதார்த்தத்தை ஆக்கப்பூர்வமாக மக்களிடம் கொண்டு செல்ல கலைஞர்கள் பெரும் முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியை மக்கள் இன்னும் இரசிக்கிறார்கள்.

நம் நாட்டின் கலைஞர்கள் தங்கள் முழு வாழ்க்கையையும் தங்கள் கலைக்காக அர்ப்பணிக்கிறார்கள். அவர்கள் பணிபுரியும் துறையை மதிக்கிறார்கள். அத்துடன் அன்பு செலுத்துகின்றனர். அவர்கள் தங்கள் பொருளாதாரத்தை விட கலைக்கு மதிப்பளித்தனர்.

கடந்த காலங்களில் இந்த மக்கள் கொவிட் தொற்றுநோயால் பல சிரமங்களை எதிர்கொண்டதை நாம் அறிவோம். நாம் அது குறித்து கவனம் செலுத்தினோம். எமது இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்கள் கலைஞர்களை நேரில் சந்தித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வந்தார்.

எத்தனை சிரமங்கள் இருந்தபோதிலும், இந்த கலைஞர்கள் கடந்த காலங்களில் வீடுகளில் முடங்கிக்கிடந்த மக்களின் மனதைக் குணப்படுத்த பல்வேறு கலை படைப்புகளை உருவாக்குவதற்கு பங்களிப்பு செய்தனர்.

அதுமாத்திரமன்றி மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் உள்ள கொவிட் நோயாளிகளின் மனதைக் குணப்படுத்த சுகாதாரத் துறையுடன் இணைந்து செய்த தியாகங்களை நாம் மறக்க முடியாது. குறிப்பாக அத்தகைய கலைஞர்களை நினைத்து பெருமை கொள்கிறோம்.

அதனாலேயே அரசாங்கத்தினால் காப்புறுதி கட்டணங்கள் செலுத்தப்படும் ‘பிரேக்ஷா’ காப்புறுதி திட்டத்தை வரலாற்றில் முதல் முறையாக எம்மால் அறிமுகப்படுத்த முடிந்தது. அன்று நாடகத் துறைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மருத்துவ உதவி விபத்து காப்புறுதி, இன்று அனைத்துக் கலைஞர்களுக்குமான ஒரு மாபெரும் படியாக மாறியுள்ளது.

எங்கள் அன்பிற்குரிய கலைஞர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த காப்புறுதியானது, கலைஞர்களுக்கு எம்மால் வழங்கக்கூடிய சிறந்த பரிசு என்று நாங்கள் நம்புகிறோம்.

அது மாத்திரமன்றி, இந்தக் காப்புறுதியை வழங்கும்போது நாம் ஒரு கலைத் துறைக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. கிராமிய கலைகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தினோம். அதுவே இந்தத் திட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனை என்று நான் நம்புகிறேன்.

அதுமட்டுமின்றி, நிரந்தர வருமானம் இல்லாத குறைந்த வருமானம் கொண்ட கலைஞர்களுக்கும், கொவிட் தொற்றுநோயால் தொழில் மற்றும் வேலை பாதுகாப்பை இழந்தவர்களுக்கும் இந்த காப்புறுதி திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

கொவிட் தொற்றினால் நம் நாட்டில் பல கலைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சுகாதார வழிகாட்டுதலின் பல்வேறு கட்டுப்பாடுகளால், சில கலைஞர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வாய்ப்பும் கிடைக்காதுபோனது. அவர்களை நாம் மரியாதையுடன் நினைவுகூர வேண்டும்.

ஒவ்வொரு கலைஞனும் இந்நாட்டின் வளம். அவர்களின் சித்தாந்தங்கள் ஒட்டுமொத்த சமூகத்திலும் காணப்படுகின்றன. சமூகத்தில் உள்ள பிற மக்களுக்கு இருக்கும் அதே உரிமை கலைஞர்களுக்கும் உண்டு. எனவே, நாட்டில் ஜனநாயக சுதந்திரத்தை அனுபவிக்க கலைஞர்களுக்கு உரிமை இருக்க வேண்டும். இந்த உரிமை கலைஞர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒரு இருண்ட கடந்த காலம் நம் நாட்டிற்கு இருந்தது. அவ்வாறானதொரு நிலை இன்று இல்லாவிட்டாலும் அதனை முழுமையாக மறந்து எதிர்காலத்தை நோக்கி நகர முடியாது.

அன்று கலைக்குக் கட்டுப்பாடுகளை விதித்து, கருத்து சுதந்திரத்தை மட்டுப்படுத்தி உங்களையும் கட்டுப்படுத்துவதற்கு சிந்தித்த பழைய சித்தாந்தங்களை மீண்டும் அலசுவதற்கு உங்களுக்கு அவசியமில்லை என்பதை நாம் அறிவோம். அன்று முதல் இன்று வரை நாம் கலைக்கும், கலைஞர்களுக்கும் வரையறைகளை விதிக்க முற்படவில்லை. நாளையும் இதே நிலைப்பாட்டிலேயே இருப்போம். ஒரு உண்மையான கலைஞனின் இதயத் துடிப்பை நாம் அறிவோம். இவர்களில் பலர் எனக்கு அப்போதிருந்து தெரிந்தவர்கள். அதனால் உங்கள் இதயத்துடிப்பை நான் அறிவேன்.

ஒரு காலத்தில் நமது தொலைக்காட்சி நாடகத் துறையே கொந்தளிப்பில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். அக்காலகட்டத்தில் வெளிநாட்டுத் தொலைக்காட்சி நாடகங்களை இங்கு ஒளிபரப்பியன் மூலம் எமது நாட்டுத் தொலைக்காட்சி நாடகக் கலை பெரும் சவாலை எதிர்கொண்டது. இவை கலைஞர்களின் வாழ்க்கையையும் பாதித்தன. அன்றைய காலத்தில் வெளிநாட்டுத் தொலைத்தொடர்புகளுக்கு வரி விதிக்க நாம் எடுத்த நடவடிக்கைகளினால் இன்று பெரும் உள்ளூர் படைப்புகள் உருவாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

எமது நாட்டின் கலைஞர்களுக்காக ரன்மிஹிதென்னவினை அமைத்தோம். அப்படியொரு டெலி கிராமத்தின் அவசியத்தை நாங்கள் நன்கு உணர்ந்திருந்தோம். கலைஞர்களும் டெலி கிராமத்தின் அவசியத்தை அவ்வப்போது எங்களிடம் சுட்டிக் காட்டினார்கள். அன்று நாம் கட்டிய ரண்மிஹிதென்னவினை நமது நாட்டிலுள்ள கலைஞர்கள் மற்றும் அண்டை நாடான இந்தியாவில் உள்ள கலைஞர்களும் பயன்படுத்திக் கொண்டனர். இம்முறை நாம் ஆட்சிக்கு வரும் போது இந்த இடங்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டிருந்தன.

நம் நாட்டில் சினிமா என்பது 75 வருடங்களாக ஒரு கலையாகவே காணப்பட்டது. நீண்ட காலமாக திரையுலகில் இருக்கும் கலைஞர்களின் பொதுவான கோரிக்கை சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என்பதுதான். நம் நாட்டு சினிமாவை வணிக ரீதியாக மீண்டும் கட்டியெழுப்ப சினிமாவை ஒரு தொழிலாக மாற்ற வேண்டும் என்று திரையுலகினர் விடுத்த கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டோம்.

கலைஞர்களுக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதும் அரசாங்கமாக நாம் பெற்ற மாபெரும் சாதனையாகும். முன்பு நம் நாட்டில் உள்ள கலைஞர்களின் தகவல்களை இப்படி ஒரே இடத்தில் பெறுவது சாத்தியமில்லை. அது மட்டுமன்றி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் கலைஞர்களின் படைப்புகளுக்கு டிஜிட்டல் அப்ளிகேஷன் மூலம் வணிக மதிப்பைக் கண்டறிவதற்கான களத்தை இன்று நாங்கள் அமைத்துள்ளோம்.

இவ்விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் கலைஞர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து அவர்களுக்காக இவ்வாறான நற்செயலை செய்வதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். எமது இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, அமைச்சின் செயலாளர், இராஜாங்க அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் மேலும் பல கலை படைப்புகளை உருவாக்குவதற்கான ஆரோக்கியமான மற்றும் வளமான எதிர்காலம் கிட்ட பிரார்த்திக்கிறேன் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

கலைப் பேரவையின் உறுப்பினர் சிரேஷ்ட பேராசிரியர் வண.பாதேகம ஞானிஸ்ஸர தேரரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

மேலும், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தேசிய மரபுரிமைகள், அரங்குக் கலைகள் மற்றும் கிராமியக் கலைகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் நிசாந்தி ஜயசிங்க, தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டீ.எம்.எஸ்.திசாநாயக்க மற்றும் இராஜாங்க அமைச்சு மற்றும் சொஃப்ட்லொஜிக் காப்புறுதி நிறுவனத்தின் அதிகாரிகள், கலைஞர்கள் என பலரும் நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.