சண்முகா ஹபாயா விடயத்தில் பாராமுகம் என்கிறது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் !

நீலிக்கண்ணீர் வடித்த தமிழ் அரசியல்வாதிகளையும் காணவில்லை : முஸ்லிம் தலைமைகள் மௌனம் கலைக்கவுமில்லை – சண்முகா ஹபாயா விடயத்தில் பாராமுகம் என்கிறது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் நீதிமன்ற மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய பாடசாலைக்குச் சென்ற திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியையினை கடமையேற்க விடாது தடுத்து நிறுத்தியமை நீதிமன்ற நியாயாதிக்கத்தின் மீது விடுக்கப்படுகின்ற சவலாகும். பாடசாலைக்குள் கூடியிருந்த தரப்பினர் சிலர் அலுவலகத்திற்குள் நுழைந்து ஆசிரியையை கடமையேற்க விடாது தடுத்துள்ளதுடன் தகாத வார்த்தைகள் கூறி இம்சித்தும் உள்ளனர். ஆசிரியையின் கையடக்கத் தொலைபேசி பறிக்கப்பட்டு கழுத்தை நெரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக குறித்த ஆசிரியையின் கணவர் ஆசிரியர் முகம்மட் றமீஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் எம்மிடமும் விளக்கம் அளித்துள்ளார். நடந்த நிகழ்வு தொடர்பான காணொளியும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் மருதமுனையில் வியாழக்கிழமை (04) மாலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அமைப்பின் தலைவர் ஜெஸ்மி எம் மூஸா தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், 2018 ஏப்ரல் மாதம் ஹபாயா அணிந்து சென்றதன் காரணமாக வெளியேற்றப்பட்ட ஆசிரியை பாத்திமா பஹ்மிதா நீதிமன்றத்தில் இருதரப்பிற்குமிடையில் ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் மீண்டும் பாடசாலைக்கு கடமையேற்கச் சென்றுள்ளார். அப்போது அவர் தாக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியை தம்மைத் தாக்கியதாகக் கூறி பாடசாலை அதிபரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியை செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு 19 பக்க அறிக்கையொன்றினை மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீதிமன்றம் ஆசிரியையின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முடிவு செய்ததோடு ஆசிரியையினை மீள ஷண்முஹாவிற்கு உடனடியாக அனுமதிக்குமாறு பிரேரித்தது. அதனடிப்படையில் கடமைக்கு சென்ற ஆசிரியை வேறுவகையான நோக்கங்களை கொண்டு தாக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் யாப்பின் கலாசார உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிப்பதோடு ஆசிரியர் ஒழுக்கக் கோவை ஹபாயா அணிவதற்கு எந்த தடையினையும் விதிக்கவில்லை எனக் கூறியுள்ள நிலையில் சட்டத்தையும் கலாசாரத்தையும் ஒருசிலர் கையிலெடுத்துச் செயற்படுவதனை நாம் ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது. திருகோணமலை சண்முகா வித்தியாலய முஸ்லிம் ஆசிரியை “முகத்தை முழுவதுமாக மூடும்” ஆடையை அணிந்து சென்றார்கள் அதனால்தான் பிரச்சினை ஏற்பட்டது என்று பொய்யான குற்றசாட்டை முன்வைக்கிறார்கள். அவர் வாழ்நாளில் “முகத்தை முழுவதுமாக மூடும்” ஆடையை அணிந்தது கிடையாது என்பதை பலரும்  உறுதிப்படுத்துகிறார். அந்த முஸ்லிம் ஆசிரியை சண்முகா பாடசாலைக்கு முகத்தை முழுவதுமாக மூடிச் சென்றாரா என்பதை அந்த பாடசாலையின் முன்னால் உள்ள கடையில் பொறுத்தப்பட்டுள்ள வீடியோ கமராவில் பார்த்து தெளிவை பெற்றுக் கொள்ளலாம் என்பதை அந்த குற்றச்சாட்டுக்களை முன்வைப்போருக்கு தெரிவித்து கொள்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் ஆசிரியர்கள் மிகவும் அந்நியோன்யமாக நிருவாகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம் பாடசாலைகள் பலவற்றில் தமிழ் ஆசிரியர்கள் அவர்களது கலாசார ஆடைகளுடனே வருகை தருகின்றனர். இதனை மாற்றியமைக்க யாராவது கூற முற்பட்டால் அதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாதோ அவ்வாறே குறித்த விடயத்தினையும் நாம் ஒருபோதும் அங்கீகரிக்க முடியது. இந்த விடயத்தில் மூத்த தமிழ் தலைவர் இரா. சம்பந்தன் தொடக்கம் சாணக்கியன் வரை யாரும் வாய்திறக்க வில்லை என்பதன் மூலம் எங்களுக்கு பலத்த அச்சநிலை தோன்றியுள்ளது. முஸ்லிம் தலைவர்களும் தனது மௌனத்தை கலைத்து பாதிக்கப்பட்ட சகோதரிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்விடயத்தில் தமிழ் கல்வியலாளர்கள் உடனடியாக செயற்பாட்டில் இறங்கி சுமூகமான நிலையினை ஏற்படுத்த முன்வர வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாமல் இருப்பதற்கான உறுதிப்பாட்டை சம்மந்தப்பட்ட தரப்பினர் வெளிப்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கான நீதியினைப் பெற்றுக் கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை விட்டு விட்டு தன்னிச்சையான செயற்பாடுகளில் ஈடுபட்டு சம்பவத்தை வேறுவடிவமெடுக்க வைப்பது தொடரான பாதிப்புக்களை ஏற்படுத்த வழிவகுக்கும் எனவும் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.