மட்டக்களப்பில் இடம்பெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு நிகழ்வு!!

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடணத்திற்கு அமைவாக போதையற்ற நாடு – சௌபாக்கியமான தேசம் எனும் மகுட வாசகத்திற்கு ஏற்ப போதையற்ற தேகாரோக்கியமான, உள சுகாதாரமான நீங்களே சிறந்த மனிதன் எனும் தொனிப் பெருளிற்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வுகள் இடம்பெற்று வருகின்றது.
இதற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று (04) திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் பி.ப 12 மணிவரை
புனித மிக்கேல் கல்லூரியின் சிரேஸ்ட  சாரணர் குழுவின் ஏற்பாட்டில் புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.
சாரண ஆசிரியரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் மாவட்ட இணைப்பாளருமான பீ.டினேஸ் தலைமையில் சிரேஸ்ட சாரணர் ஆர்.சாலோமின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு செயலமர்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் கலந்துகொண்டிருந்ததுடன்,  போதைப்பொருள் பாவனையினையை கட்டுப்படுத்துவதன் அவசியம் தொடர்பான கருத்துரையினையும் வழங்கியிருந்தார்.
இதன்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் உள நல வைத்திய நிபுணர் அருள்ஜோதி கலந்துகொண்டு போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள், அதனை தடுப்பது அல்லது குறைப்பது தொடர்பான கருத்துரைகளை முன்வைத்ததுடன், சமூகத்திற்கு இவ்விடயங்களை  சாரண மாணவர்கள் ஊடாக எவ்வாறு கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாது கொண்டு சேர்க்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது விபரித்திருந்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் சிரேஸ்ட மற்றும் கனிஷ்ட பிரிவு சாரண மாணவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.