“எனக்குள்ளே” இசை வெளியீட்டு விழாவில் கண் தானம் செய்த படக்குழுவினர்!!

இந்திய சினிமா துறைக்கு நிகராக பல்வேறுபட்ட கலைப் படைப்புகள் மட்டக்களப்பு மாவட்ட கலைஞர்களால் வெளியிடப்பட்டு வரும் நிலையில் அண்மைக்காலத்தில் மட்டக்களப்பு வர்த்தக சினிமா துறையில் பாரிய சாதனை படைத்த “சிப்ஸ் சினிமாஸ்” தயாரிப்பு நிறுவனமானது தனது இரண்டாவது படைப்பாக இம்மாதம் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படவிருக்கும் ஓர் நடுத்தர நீளத் திரைப்படமான “எனக்குள்ளே” எனும் திரைப்படத்தினை தயாரித்து வருகின்றது.
அந்தவகையில் புதிதாக சமூக சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுவரும் “எனக்குள்ளே” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (05) திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு வில்லியம் மண்டபத்தில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுள்ளது.
“சிப்ஸ் சினிமாஸ்” உரிமையாளரும்  மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளருமாகிய வைத்தியகலாநிதி சுகுணன் குணசிங்கம் அவர்களது தலைமையில், “எனக்குள்ளே” திரைப்படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளர் முரளீதரன் அவர்களது நெறிப்படுத்தலிலும் இடம்பெற்ற இந்த நிகழ்வை இப்படத்தின் இயக்குநர் கோடீஸ்வரன் மற்றும் அவரது படக்குழுவினர் சிறந்த முறையில் நடாத்தியிருந்தனர்.
இசை வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பாரதி கெனடி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசாரப்பிரிவின் பீடாதிபதி கலாநிதி ஜே.கெனடி, கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கந்தசாமி அருளானந்தம், மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வீ.ரஞ்சிதமூர்த்தி, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி என். மயூரன், மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி.வளர்மதி ராஜ், சமூக பற்றாளர் சோமசூரியம் திருமாறன்,
மகுடம் இதழ் ஆசிரியர் மைக்கல் கொலின் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நம் நாட்டி கலைஞர்களின் நடிப்பில் “சிப்ஸ் சினிமாவினால் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் “எனக்குள்ளே” திரைப்படத்தின் இசை இறுவெட்டின் முதல்ப்பிரதி “சிப்ஸ் சினிமாஸ்” உரிமையாளரும்  மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளருமாகிய வைத்தியகலாநிதி சுகுணன் குணசிங்கம், தயாரிப்பாளர்களான முரளீதரன், கோடீஸ்வரன் மற்றும் இசை அமைப்பாளர் கேசாந்த் குலேந்திரன் ஆயோரினால் பிரதம அதிதிக்கு வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கேஷாந்த் குலேந்திரனின் இசையமைப்பில் உருவான மூன்று பாடல்கள் வெளியிடப்பட்டதுடன் மட்டக்களப்பில் உள்ள சில மேடைக் கலைஞர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தவும் இதன்போது களம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது.
இப்படத்தில் பணியாற்றியவர்கள் தமது கண்களைத் தானம் செய்திருந்ததுடன் அதற்கான சான்றிதழ்கள் “எனக்குள்ளே” விழா மேடையில் வைத்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
படத்தின் பாடல்களும், டீசரும் மிக விரைவில் சமுக வலைத்தளங்களில் வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.