பாதிக்கப்பட்டு உரிமை இழந்து நிற்கும் எமது தமிழினத்திற்காக நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும்… (பா.உ கோ.கருணாகரம் ஜனா)

அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் நமது மக்களின் தீர்வு விடயத்தில் இன்னும் விரைவாகக் கூடுதலான பெறுபேறுகளை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும். பாதிக்கப்பட்டு உரிமை இழந்து நிற்கும் எமது தமிழினத்திற்காக நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

இன்றைய தினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வடம் 46ஃ1 தீர்மானம் கடந்த வரும் மார்ச் மாதத்தில் மனித உரிமைகள் ஆணையகத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த அடிப்படையில் இலங்கையில் பொறுப்புக் கூறல் என்பது பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் மிச்சல் பச்லட் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

ஒவ்வொரு முறையும் ஐநா கூட்டத்தொடர் நடைபெறும் போதும் பாதிக்கப்பட்ட எமது தரப்பில் இருந்து பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று அந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதும், நேடியாகப் பங்குபற்றமால் இங்கிருந்து இங்கு நடைபெறும் அநியாயங்களை மனித உரிமை மீறல்களை கடிதம் மூலமாக அனுப்பி வைப்பதாகவும் நிகழ்வுகள் நடைபெறும்.

அந்த வகையில் இவ்வருடமும் ஐநா கூட்டத்தொடரை முன்நிறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு கடிதம் அனுப்பியிருக்கின்றது. அதே போன்று விபரமாக இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்புகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினூடாக நடைபெறும் கைதுகள் தொடர்ந்தும் அரசியற் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போன்ற பல விடயங்களை உள்ளடக்கி தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் தமிழீழ விடுதலை இயக்கம், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசியக் கட்சி போன்ற ஐந்து கட்சிகளும் இணைந்து விபரமான அறிக்கையை அனுப்பியிருந்தோம்.

அந்த கடிதத்தின் அடிப்படையில் ஐநா அதிகாரிகள் மெய்நிகர் மூலமாக இந்த ஐந்து கடசிகளின் தலைவர்களுடனும் உரையாடியிருந்தார்கள். இதன்போது உரையாடப்பட்டதும், ஐந்து கட்சிகளினால் அனுப்பப்பட்ட கடிதத்திலுள்ளதுமான பல விடயங்கள் ஆணையாளரினால் 48 அங்கத்துவ நாடுகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள 13 பக்க அறிக்கையிலே உள்ளடக்கப்பட்டிருப்பது எங்களுக்கு உண்மையிலே மகிழ்ச்சியைத் தருகின்றது.

அந்த அறிக்கையின் நிமித்தம் இலங்கையில் பொறுப்புக் கூறல் என்பது முறையாக நடைபெறவில்லை, சகலராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசிலமைப்பின் ஊடாக நிரந்தர அரசியற் தீர்வினைக் காண்பதற்குரிய முக்கியத்துவம் போன்றன வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.

அதற்கும் மேலாக அண்மையில் இடம்பெற்ற மெய்நிகர் கலந்துரையாடலிலே இந்தியா சார்பில கலந்து கொண்ட ஐநா அதிகாரி 13வது திருத்தச் சட்டம் உள்ளடங்கலாக, ஒரு சிலர் இங்கு கொக்கரிப்பது போல 13வது திருத்தச் சட்டம் மாத்திரம் அல்ல. 13வது திருத்தம் உள்ளடங்கலாக இலங்கையிலே தமிழர்கள் சமத்துவமாக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான அதிகாப்பரவலாக்களுடன் கூடிய ஒரு அரசியற் தீர்வு கொண்டு வரப்பட்டு மிக விரைவில் ஒரு மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.

இவைகளையெல்லாம் பார்க்கும் போது எமக்கான ஒரு தீர்வு மிக விரைவில் வரும் என்பதில் ஒரு அளவிற்கு நிம்மதியடையும் நம்பிக்கை வந்துள்ளது. தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் அனைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கு நிலையில் இருந்த காலத்தில் ஒற்றுமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக அரசியல் ரீதியாகப் போராடிய கட்சிகள் 2009ற்குப் பிற்பாடு இந்தக் கட்சிகள் பிளவு பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் பிளவுபடுவதற்கான காரணங்களும் எமக்குத் தெரியாமலில்லை. இந்த விடயத்திலே நாங்கள் நீ பெரிது நான் பெரிது என்று பார்க்காமல் இன்று இந்த ஐந்து கட்சிகள் ஒன்றாக இணைந்து ஐநா ஆணையாளருக்குக் கடிதம் எழுதியதைப் போன்று ஏனைய அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் இன்னும் விரைவாக கூடுதலான பெறுபேறுகளை நாங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

அந்த வகையிலே பாதிக்கப்பட்டு உரிமை இழந்து நிற்கும் எமது தமிழினத்திற்காக நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்பதை மிகவும் வலிந்து கேட்டுக் கொள்கின்றேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.