சர்வதேச மகளிர் தினம்- ‘நிலைபேறான எதிர்காலத்திற்கு இன்றே பால்நிலை சமத்துவத்திற்காக பாடுபடுவோம்.

அப்துல் அஸீஸ் பிராந்திய இணைப்பாளர், 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, 
கல்முனை .
 
இன்று நாட்டின் அபிவிருத்தியில் முன்னின்று உழைக்கும் சக்தியாக பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் கடின உழைப்பில் எத்தனையோ குடும்பங்கள் வாழ்கின்றது. ஆண்களைப் போலவே பெண்களும் இன்று வேலைத் தளங்களுக்குச் சென்று உழைத்து ஊதியம் பெறுகின்றனர். மற்றுமோர் வகையில் முறைசாறாத் தொழில்களில் அற்பணிப்புடன் ஈடுபட்டு அதில் பெருமளவு சம்பாதித்து தொழில் வளங்குனர்களாக மாறியிருப்பதையிட்டு பெண் சமுகம் பெருமை கொள்கிறது.
பெண்களின் பங்களிப்பு எல்லாத் துறைகளிலும் முக்கியம் பெற்றிருந்தாலும், அதற்கான சமூக அங்கீகாரமும், சமத்துவமான நடத்துகையும், போதிய ஓய்வும் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
பெண்களுக்கான உரிமை இல்லாதவிடத்தில் மனித உரிமைகள் இருக்க முடியாது. இன்றைய எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் ஏற்படும் அன்றாட விலைவாசி காரணமாகவும், சீதனக் கொடுமையென்றும், மணமுடித்த கணவன் அநாதரவாய் விட்டுச் சென்றுள்ளானெனவும், பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் வாழ்க்கைச் சுமைகளை சுமந்து கண்ணீர் விட்டழுகின்ற பெண்களின் நிலை பற்றியும், கொரோனா தொற்று காலத்தின் போது வீட்டில் அனைவர்களும் முடங்கிக் கிடந்த போது பெண்ணானவள் இயந்திரம் போல் வேலை செய்து குடும்பச் சுமைகளுடன் உருக்குலைந்து போனதையும்  நாம் கவனஞ்செலுத்த வேண்டும்.
உலகில் உணவுப் பொருள் உற்பத்தியல் 75சத வீதம் முதல் 90 சதவீதம் வரை பெண்கள் செய்கிறார்கள். அத்துடன் அவர்கள் குடும்பங்களை தலைமை தாங்கி நடாத்துபவர்களாகவும் இருக்கிறார்கள. ஆனால்  பெண்களின் நிலைபற்றி சமுகவியலாளர்கள் ஏழ்மையின் பெண்மை மயமாகும் என்று குறிப்பிடுகிறார்கள். ஏழையாக இருக்கின்ற வயது வந்த மக்கள் தொகையில் மூன்றுக்கு இரண்டு பேர் பெண்கள். இருப்பினும் உலகில் மூன்றில் இரண்டு  பங்கு வேலையை பெண்களே செய்கிறார்கள். தெற்காசியாவில் வாழும் ஒவ்வொரு இரண்டு பெண்களிலும் ஒருவர் தனது நாளாந்த வாழ்க்கையில் வீட்டு வன்முறைகளுக்கு முகங் கொடுப்பதாக புள்ளி விபரங்கள் சுட்டிக் காட்டுகிறது. சில ஆணாதிக்க சிந்தனையுள்ள சமூகங்களில்  சமயமோ, மரபோ சமவுரிமைக்கு குறுக்கே நிற்கக்கூடும்.
சமுகத்தில் பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கு மாற்றம் வீட்டில் தொடங்க வேண்டும்.  பெண்களுக்கு இன்றைய காலப் பகுதியில் மிக முக்கியமான தேவை அவர்களின் கல்வி. உலகில் அவர்கள் சந்திக்கும் சவால்களை இனங்கண்டு அவர்களை வலுவூட்ட வேண்டும். தனிக் குடும்பங்களில் மாற்றம் ஏற்பட்டால் அதன் பின்னர் சமுகத்தில் மாற்றம் ஏற்படும். வரலாறு முழுவதுமே சமத்துவத்திற்காகவும் நீதிக்காகவும் பெண்கள் ஒருங்கிணைந்து போராடி வந்திருக்கிறார்கள் என்பது வரலாறு.
இன்று ஆண்களின் மனப்பாங்கிற்கேற்ப வளைந்து கொடுத்துச் செல்ல வேண்டும் என பெண்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். ஒரு வீட்டுச் சூழலை எடுத்துக் கொண்டால் வீட்டில் பெண்கள் என்ன செய்கிறார்கள் ஆண்கள் என்ன செய்கிறார்கள். அவர்கிளிடையிலான விவாதங்கள் அதன் முடிவுகள் ஆகியவற்றில் பெண்களும் சமமாகப் பங்கேற்க முடிகிறதா?  அல்லது முக்கியமானவற்றை ஆண்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட நேர்கிறதா? சில விதி விலக்குகள் இருந்தாலும் பெண்கள் ஆண்களுக்கு இரண்டாம் நிலையில் ஆதரவுப் பங்கேற்பார்களாகத்தான் இருக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் பெண்கள் பாலியல் நிறைவுக்கான பொருளாகத்தான் ஆண்களினால் பாவிக்கப்டுகிறார்கள்.
எமது நாட்டில் பெண்களின் உழைப்பு அதிகமாக இருந்தாலும் ஆண்களை விட மிகக் குறைவான ஊதியமே பெறுகிறார்கள். பழங்காலத்து முறைமைகளில் பெண்கள் தங்களை ஈடுபடுத்தி வருவதன் காரணமாகவே இவற்றுக்கான உபகரணங்கள், பொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்குக்கூட  அவர்களிடம் தேவயான பணம் இருப்பதில்லை. குறிப்பாக பெருந்தோட்டத் துறைகளிலுள்ள பெண்கள் பாரபட்சம் காட்டப்பட்டு வருகிறார்கள்.
இவ்வாறு இருக்கினற போது பல்வேறுபட்ட சமூக, பொருளாதார மற்றும் கலாசாக் காரணிகளின் அடிப்படையில் பெண்களின் திருமண வயது முற்படுத்தப்படுகின்றது. இலங்கைச் சட்டத்திற்கு அமைவாக பெண்களின் திருமண வயதானது சர்ச்சைக்குள்ளான ஒரு தலைப்பாக தொடர்ந்தும் இருந்துவருகின்றது. உலகின் பல நாடுகளில் இளவயதுத் திருமணம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இளவயதுத் திருமணம் அவரவர் பெற்றோர்களாலோ குடும்பத்தாலோ பல பெண்கள் 18 வயதாவதற்கு முன்பே கட்டாயப்படு;த்தி திருமணம் முடிக்கப்படுகிறார்கள். தாங்களாக விரும்பி அதனைச் செய்வதில்லை. இளவயதில் இளைஞர்களினால் ஏமாற்றப்பட்டவர்களாகவும், முகநூலில் தகாத படங்கள் பதிவிட்டு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாலும் இன்று பெண்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவும் பெற்றோர் பணத்திற்கு வீண்சுமை என்றும் கருதப்படுகிறார்கள்.
யுனிசெப் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 50,000 பெண்கள் பிள்ளைப்பேறின் போது உயிரிழப்பதாகவும், இவர்களின் பெரும்பாலானவர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானத்தையுடைய பெண் சிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டது. இளவயதுத் திருமணம் ஆண், பெண் சிறுவர்களின் வாழ்வில் பல எதிர்மறையான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. மேலும் சிறுவர்களின் உரிமை மீறலாகவும் இது காணப்படுகின்றது. உலக நாடுகளினதும், ஐக்கிய நாடுகள் சபையினதும் கவனத்தை ஈர்த்த பாரிய பிரச்சினையாக இது மாறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கைக்கு அமைய வருடம்தோரும் 16மில்லியன் இளம் வயதுப் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்வதாகவும், இதன் போது இடம்பெறும் மரணத்தில் அதிகமாவை 15 மற்றும் 19வயதுக்கு இடைபட்டவர்கள் என்பதும் ஆய்வின் முடிவுகளினூடாக சுட்டிக்காட்டப்படுகின்றது
பெற்றோர்கள் பிள்ளைகளின் உடல், உணர்வு நன்கு வளர்ச்சி பெறுவதற்கு முன்னர்  அவர்களை திருமணத்திற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த நிலையைச் சந்திக்கும் பெண்கள் பெற்றோரிடம் எடுத்துக் கூற வேண்டும். இள வயதுத் திருமணத்தி;ற்கு ஒப்புக்கொள்ளும் பெண் தனது ஒட்டு மொத்த வளர்ச்சியின்மை, மகிழ்ச்சியின்மை போன்ற வேறு பலவற்றிற்கும் ஒப்புக் கொடு;ப்பவளாகிறாள்.  தனது இலட்சியங்களையும் எதிர்கால ஆசைகளையும் அவளினால் விட வேண்டி ஏற்படுகிறது.
பெண்களுக்கு  எதிரான வன்முறைகள், அநீதிகள் பரவலாக இடம்பெற்று வருகின்றது. அவற்றிக்கெதிராக விழிப்புணர்வு தேவை. இவற்றிற்கு சவால் விடுதல் போன்றவற்றில் பெண்கள் அமைப்புக்கள்  மிகத் தெளிவான முன்னேற்றத்தை பெற்றிருந்தாலும் இது பாதி;ப்புக்குள்ளாகி வருகின்ற பெண்களிடம் சென்றடையவில்லை என்பது பெரும் குறையாக இருக்கின்றது.
எனவே நடப்பு ஆண்டின் சர்வதேச பெண்கள் தினத்தின் தொனிப் பொருளாக ‘நிலைபேறான எதிர்காலத்திற்கு இன்றே பால்நிலை சமத்துவத்திற்காக பாடுபடுவோம்’ என்பதற்கிணங்க பெண்களின் வாழ்க்கையில் எல்லாக் எல்லாக் கூறுகளிலும் சம உரிமையும், சம கௌரவமும் கிடைப்பதற்கு அனைவர்களும் முன்னின்று உழைகக வேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.