இறுதி உயிர் இருக்கும் வரையிலும் எமது உறவுகளைத் தேடிய பயணம் தொடரும்; முல்லை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது சங்க செயலாளர் – ரஞ்சனா

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை எனவும் மாறாக, போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கச் செயலாளர் ரஞ்சனா தெரிவித்துள்ளார்.

எனினும் இறுதி உயிர் இருக்கும்வரையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டமானது தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தினை துக்கநாளாகக் கடைப்பிடித்து, முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கெண்ட போராட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கதும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 2009ஆம் ஆண்டுபோர் மௌனிக்கப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்திடம் கையளித்த  உறவுகளைக் கேட்டு ஐந்துவருடங்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். தற்போது நாம் எமது தொடர்போராட்டத்தின் ஆறாவது வருடத் தொடக்கத்தில் இருக்கின்றோம்.

மக்கள் அனைவரும் சர்வதேச மகளிர் தினத்தினை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையிலே, நாம் மகளிர் தினத்தினைத் துக்கதினமாக கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம்.

யுத்தகாலத்திலே உறவுகளைத் தொலைத்துவிட்ட தாய்களாய், சகோதரிகளாய், துணைவிகளாய், ஏனைய உறவுகளாகவும் நாம் தற்போது வீதிவீதியாக கண்ணீரும் கம்பலையுமாக எமது உறவுகளைத் தேடிவருகின்றோம்.

இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகளையும், வெள்ளைவானில் கடத்தப்பட்ட உறவுகளையும், வீடுவீடாக இராணுவம் கைதுசெய்த உறவுகளையும் நாம் இதுவரை இலங்கை அரசிடம் கேட்டு பயனளிக்காதநிலையில், தற்போது சர்வதேசத்திடம் நீதிகேட்டு போராடிவருகின்றோம்.

இந்தப் போராட்டந் தொடங்கி ஐந்துவருடங்கள் பூத்தியாகியுள்ள சூழலில் எங்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. எனவே நாம் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்கின்றோம்.

இவ்வாறு நாம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, எமது தொடர் போராட்டத்தை வீழ்ச்சியடையச்செய்வதற்கான முயற்சிகளே இங்கு இடம்பெறுகின்றன. எமது போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை என்பதுடன், எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைக்கவேண்டுமென யாரும் எண்ணுவதாகவுமில்லை.

எமது இறுதி உயிர் இருக்கும் வரையிலும் எமது உறவுகளைத்தேடிய எமது போராட்டம் தொடரும் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.