காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதிகிடைக்க அனைத்து தரப்புக்களும் ஒத்துழைப்புத் தரவேண்டும்; முல்லை வலிந்துகிணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி – மரியசுரேஸ் ஈஸ்வரி

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், உறவுகளைத் தேடிப் போராடிய நூறிற்கும் மேற்பட்ட தாய், தந்தையர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்திற்கான ஆதரவுகளும் குறைந்து வரும் நிலையில் அனைத்துத் தரப்புக்களும் தங்களாலான ஒத்துழைப்புக்களை வழங்கி காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கான நீதியை பெற்றுத் தரவேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

மகளிர் தினத்தினை துக்கநாளாகக் கடைப்பிடித்து முல்லைத்தீவில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மகளிர்களின் சுதந்திரத்தினை உறுதிப்படுத்துகின்ற சர்வதேச மகளிர் தினத்திலே, ஒவ்வொரு வருடமும் கறுப்பு ஆடைகளை அணிந்து மகளிர் தினத்தினை துக்க தினமாக கடைப்பிடிக்கின்றோம்.  இந் நிலையில் சர்வதேசம் இன்னும் எங்களை ஏன் திரும்பிப் பார்க்கவில்லை.

பாதிக்கப்பட்ட உறவுகளின் சார்பில் சர்வதேசத்திடம் நீதியைக் கேட்கும்போது ஏன் அவர்கள் எமக்கான நீதியைத் தர மறுக்கின்றார்கள்.

நாம் உண்மையைத்தானே தெரிவிக்கின்றோம். இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட, வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்ட, வீடுவீடாக புகுந்து கடத்தப்பட்ட உறவுகளையே நாங்கள் கேட்கின்றோம்.

ஐக்கியநாடுகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடரிலே, இலங்கை எவ்வித குற்றச்செயல்களையும் புரியவில்லை என இலங்கை சார்பில் கூட்டத் தொடரில் கலந்துகொள்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் குற்றச்செயல்கள் இடம்பெற்றது என்பதற்குச் சாட்சியாக நாங்கள் இங்கு இருக்கின்றோம். நாங்கள் எமது உறவுகளை இராணுவத்திடம் கொடுத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கின்றோம் என்பதைச் சொல்லிவைக்க விரும்புகின்றோம்.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல் நாம் விடாமுயற்சியுடன் தொடர்ந்தும் எமது உறவுகளைத் தேடிய போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளாகிய நாம் பலமிழந்து வருகின்றோம். குறிப்பாக கடந்த ஐந்துவருட தொடர்போராட்டத்தில் எம்மோடு இணைந்து போராடிய நூறிற்கும் மேற்பட்ட தார்மார்கள் இறந்துள்ளார்கள். அவர்களுக்கான நீதி என்ன? இவ்வாறான பல துயரங்களைக் கடந்தும் எமது உறவுகள் எமக்கு வேண்டுமெனக் கேட்டு தொடர்ந்தும் போராடிவருகின்றோம்.

சர்வதேசம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய எமக்குரிய நீதியை நிச்சயம் பெற்றுத்தரவேண்டும்.

எம்மைப் பொறுத்தவரையில் மிகவும் வேதனையான விடயம் என்னவெனில், தனியே எமது உறவுகளே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். வேறு எந்த சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்புக்களும் எமக்கு இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

எம்மை வழிநடாத்திய எத்தனையோ பங்குத் தந்தையர்கள் தற்போது ஒதுங்கி நிற்கின்றனர். நாம் இராணுவத்திடம் கையளித்த உறவுகளைக் கேட்டுத்தானே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம்.

எனவே யாரும் இந்த அரசுக்குப் பயப்படவேண்டாம். எமக்கு அனைத்து தரப்புக்களும் முழுமையான பங்களிப்புக்களைத் தாருங்கள்.

புலம்பெயர் தேசங்களிலுள்ள எமது உறவுகளே, நீங்களும் எங்களுக்காக உங்களுடை ஆதரவுகளின் ஊடகாக எமக்கான நீதியினைப் பெற்றுத்தாருங்கள் – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.