விவசாயிகள் தமக்குத் தேவையான எரிபொருளை போத்தல்களில் பெறலாம்-மாவட்ட விவசாய குழுக் கூட்டத்தில் தீர்மானம்

சாவகச்சேரி நிருபர்
தற்போது நாட்டில் எரிபொருள் பெறுவதில் நிலவும் நெருக்கடி நிலைகளில் இருந்து யாழ் மாவட்ட விவசாயிகளை மீட்டு-அவர்களின் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15/03 செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தின் போதே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது எரிபொருள் நெருக்கடி நிலைமையைப் பயன்படுத்தி சிலர் எரிபொருட்களை போத்தல்களில் பெற்று அதனை கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதால் வாகனங்களை கொண்டு சென்று எரிபொருள் நிரப்பும் நடைமுறை தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது.இதனால் விவசாயிகள் டீசல் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றைப் பெற தமது விவசாய உபகரணங்களுடன் செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து விவசாயிகள் சிரமம் இன்றி மண்ணெண்னை,டீசல் ஆகியவற்றை பெறும் முகமாக பிரதேச கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளது பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு அரசாங்க அதிபர் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபன பிராந்தியப் பணிப்பாளரது ஒப்புதல்களுடன் விவசாயிகள் தமக்கு தேவையான டீசல் மற்றும் மண்ணெண்ணையை போத்தல்களில் பெற்றுச் செல்வதற்கான வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எரிபொருள் தட்டுப்பாட்டு சூழ்நிலைகளில் தேவையான எரிபொருட்களை இருப்பில் வைத்திருந்து விவசாய மேம்பாட்டிற்கு உதவ வேண்டும் என அங்கஜன் இராமநாதன் துறைசார் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.