நம்பத்தகாத ஆதாரத்தை நம்பிய ஆஸ்திரேலிய புலனாய்வு அமைப்பு: 10 ஆண்டுக்கால வாழ்க்கையை இழந்த எகிப்து அகதி

நம்பத்தகாத ஆதாரத்தை நம்பிய ஆஸ்திரேலிய புலனாய்வு அமைப்பு: 10 ஆண்டுக்கால வாழ்க்கையை இழந்த எகிப்து அகதி 

சித்ரவதையின் மூலம் பெறப்பட்ட நம்பத்தகாத ஆதாரம் எனத் தெரிந்தே அந்த ஆதாரத்தின் அடிப்படையில் எகிப்து நாட்டு அகதியான Sayed Abdellatif-யை ஆஸ்திரேலிய அரசு 10 ஆண்டுகளாக சிறைப்படுத்தி வைத்திருப்பதை ஆஸ்திரேலிய நீதிமன்றம் கண்டறிந்திருக்கிறது.

இந்த அகதியை தடுப்புக்காவலில் வைத்திருப்பது நியாயமற்றது, குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனத் தொடர்ச்சியாக சொல்லப்பட்ட போதிலும் அதை ஆஸ்திரேலிய அரசு கணக்கில் எடுக்கவில்லை எனப்படுகிறது.

ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பால் (Australian Security Intelligence Organisation) செய்யப்பட்ட ‘பாதகமான பாதுகாப்பு மதிப்பீடுகள்’ எகிப்து அகதி தஞ்சம் கோருவதை தடுக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவை “சட்டபூர்வமாக நியாயமற்றவை” என்றும் நீதிபதி Debra Mortimer-யின் 133 பக்க தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் விசாரணை முறையை “நியாயமற்றது மற்றும் நம்பத்தகாதது” என நீதிபதி விமர்சித்திருக்கிறார். அத்துடன் ரமலான் நோன்பின் போது 8 மணிநேரமாக 700 கேள்விகள் அந்த அகதியிடம் கேட்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

1999ம் ஆண்டு எகிப்து நாட்டில் நடந்த நம்பத்தகாத விசாரணையில் Sayed Abdellatif பங்கேற்ககாத நிலையில், கடுமையான சித்ரவதையின் மூலம் பெறப்பட்ட ஆதாரத்தின் அடிப்படையில் இவரை ஜிகாத் தீவிரவாதி என எகிப்து நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், தான் ஒருபோது ஜிகாத் தீவிரவாத அமைப்பின் அங்கத்தவர் இல்லை என Sayed Abdellatif மறுத்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு தி கார்டியன் ஊடகம் நடத்திய விசாரணை ஆய்வில், மின்சார பாய்ச்சுதல், தந்தையை சித்திரவதை செய்தல் உள்ளிட்ட மோசமான சித்திரவதை மூலம் இந்த ஆதாரம் திரட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த Sayed Abdellatif மற்றும் அவரது குடும்பத்தினரை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்தது.

ஆனால், கடந்த 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக (லிபரல் கட்சி) இருந்த Tony Abbott-யால் ‘தண்டிக்கப்பட்ட ஜிகாத் பயங்கரவாதி’ என எகிப்து நாட்டு அகதியான Sayed Abdellatif முத்திரைக் குத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்த அகதியை அப்போதைய ஆஸ்திரேலிய அரசாங்கம் குடும்பத்தினரிடம் இருந்து பிரித்து உயர் பாதுகாப்பு தடுப்பு முகாமிற்கு மாற்றியது.

 

பின்னர், ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் கண்மூடித்தனமான முன்முடிவினாலும் நம்பத்தகாத ஆதாரத்தை நம்பியதாலும் 10 ஆண்டுகளாக அந்த அகதி சிறையில் சிக்கியுள்ளதாக ஆஸ்திரேலிய நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இந்த அகதிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதை ஆஸ்திரேலிய நீதிமன்றம் கண்டறிந்துள்ள நிலையில்,  இவர் விரைவில் விடுதலை செய்யப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.