இத்தனை காலமும் எமது மக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், சூழ்நிலைகளையும் இன்று பேராடும் சிங்கள மக்கள் உணர்ந்திருப்பார்கள் என நம்புகின்றோம்… (ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் – இ.கதிர்)

(சுமன்)

சிங்கள மக்களைப் பொருத்த மட்டிலே இவ்வருட புத்தாண்டில் ஒரு சிறிய பாதிப்பினையே எதிர்கொண்டு நிற்கின்றார்கள். ஆனால் இந்த நாடு சுதந்திரமடைந்தது முதல் தமிழ் மக்கள் ஒவ்வொரு புதுவருடத்திற்கும் இதைவிடப் பன்மடங்கு மிகப் பெரிய சவால்களையும், சோதனைகளையும் சந்தித்திருக்கின்றார்கள். எனவே எமது மக்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், சூழ்நிலைகளையும் இன்று பேராடும் சிங்கள மக்கள் புரிந்து கொண்டு செயற்படுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.

புதுவருட வாழ்த்துச் செய்தியுடன், சமகால அரசியல் நிலைமை தொடர்பிலும் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2022ல் பிறக்கும் இந்த தமிழ் சிங்கள சித்திரைப் புதுவருட தினத்தில் உலகத் தமிழ் மக்களுக்கும் நம் நாட்டின் சிங்கள மக்கள் அனைவருக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அண்மையில் பிரதமரின் உரையானது இந்த நாட்டின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எவ்வாறு முனையலாம் அதற்கு மக்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெரிவிப்பதற்கு அப்பால் தங்களுடைய ஆட்சி அதிகாரங்களை இந்த நாட்டில் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்காக தங்களின் வழமையான இனவாதக் கருத்துகளையே கூடுதலாக முன்வைத்திருக்கின்றார்.

உண்மையிலேயே யுத்த காலத்திலும் சரி யுத்தம் மௌனிக்கப்பட்டதற்குப் பின்னரும் சரி ஆட்சி அதிகாரத்திலிருந்த இந்த ராஜபக்ச குடும்பமே இவ்வாறு நாடு பின்நோக்கிப் போவதற்குக் காரணம். இதனை உணர்ந்த சிங்கள மக்கள் இன்று கொதித்தெழுந்து இவர்களது குடும்ப ஆட்சிக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்ற சூழலில் மீண்டும் தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியவாறு பயங்கரவாத, இனவாத சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

இந்த நாட்டிலே தொடர்ந்து ஆட்சி செய்த கட்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களை தங்கள் எதிரிகளாகக் காட்டியதும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்துக் காட்டியதுமாக தங்கள் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வந்தனர். நாங்கள் ஆயதமேந்துவதற்குக் காரணமாக இருந்தவர்கள் இந்த சிங்கள ஆட்சியாளர்களே என்பதை சிங்கள மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் எமது ஆயதப் போராட்டம் எமது மண்ணில் நிழல் அரசொன்றை உருவாக்கி எமது மக்களுக்கான சிறந்த சோசலிச ஆட்சி முறையை வழங்கியது. எமது போராட்டம் தொடர்பாக இன்று சிங்கள மக்கள் மத்தியில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பது போல் தெரிகின்றது. தமிழர்களின் போராட்டம் ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் ஜனநாயக ரீதியான போராட்டம் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சூழல் உருவாகியிருப்பதாகவும் தெரிகின்றது. இந்த நிலை தொடருமானால் சிங்களப் பேரினவாதத்தைக் கக்கி ஆட்சி அதிகாத்தில் இருக்கும் தாங்கள் தொடர்ந்தும் இவ்வாறு இருக்க முடியாது என்பதால் இதனைக் குழப்பும் முயற்சிகளை ராஜபக்ச குடும்பம் செய்து வருகின்றது.

இவர்கள் ஒரு காலத்திலும் சிங்கள மக்களுக்கு நல்ல தலைவர்களாக இருந்ததும் இல்லை, இருக்கப் போவதும் இல்லை. தற்போது நாட்டை பொருளாதார ரீதியில் சீரழித்துவிட்டு, உலக நாடுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில் இன்னும் இன்னும் தங்களின் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து தமிழர்களின் போராட்டத்தைப் பயங்கரவாதப் போராட்டமாகச் சித்தரித்து தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக வாழ்ந்துவிடக் கூடாது, இந்த நாட்டிலே உண்மையான ஜனநாயக ஆட்சி முறை வந்துவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாகச் செயற்படுகின்றார்கள்.

சிங்கள மக்களைப் பொருத்த மட்டிலே இவ்வருட புத்தாண்டில் ஒரு சிறிய பாதிப்பினையே எதிர்கொண்டு நிற்கின்றார்கள். ஆனால் இந்த நாடு சுதந்திரமடைந்த 74 ஆண்டுகளாக தமிழ் மக்களாகிய நாங்கள் ஒவ்வொரு புதுவருடத்திற்கும் இதைவிடப் பன்மடங்கு மிகப் பெரிய சவால்களையும், சோதனைகளையும் சந்தித்தவர்கள். எனவே எமது மக்கள் எதிர்கொண்ட சவால்களையும், சூழ்நிலைகளையும் இன்று பேராடும் சிங்கள மக்கள் புரிந்து கொண்டு செயற்படுவார்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். எனவே எதிர்காலத்தில் அனைத்து மக்களின் உரிமைகளையும் வழங்கும் விதமாக சிறந்த ஒரு ஜனநாயக ஆட்சி முறையை உருவாக்கும் அளவிற்கு சிங்கள மக்களின் இந்தப் போராட்டம் வலுப்பெற வேண்டும்.

மக்களின் இத்தகு ஜனநாயகப் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் ராஜபக்ச குடும்பம் தொடர்ந்தும் தங்கள் ஆட்சியைத் தக்க வைக்;க முற்படுமாக இருந்தால் மக்களின் போராட்டங்கள் இன்னும் இன்னும் தீவிரமடையும். இந்த நாட்டை பௌத்த குடிமகன் ஆட்சி செய்வதை நாங்கள் எதிர்க்கவில்லை, வரவேற்கின்றோம். இந்த நாட்டைச் சிறந்த பௌத்த குடிமகன் ஆட்சி செய்ய வேண்டும். சிங்கள மக்கள் எங்கள் எதிரிகள் அல்ல. சிங்கள மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். உண்மையாக மக்களை நேசிக்கும் ஆட்சியாளர்களால் அவர்கள் ஆட்சி செய்யப்பட வேண்டும் என்பதை விரும்பியே நாங்கள் செயற்பட்டு வந்திருக்கின்றோம்.

இந்த நிலைமைகளை எமது நாட்டின் மூவின மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் நாமும் எமது மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் தீவிரப்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.

கடந்த காலத்தில் தமிழினத்தை அழித்து ஒடுக்கும் போருக்கு உலகம் முழுவதும் உதவி பெற்று சிங்கள இனவாத ஆட்சியாளர்கள் செயற்பட்டார்கள். அந்தப் பாவமே தற்போது உலகத்தின நெருக்குவாரப் பிடிக்குள் தள்ளப்பட்டு மீளமுடியாத நிலைக்குள் இலங்கை சென்று கொண்டிருக்கின்றது. உலக நாடுகள் எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளைகப் புரிந்து கொண்டு இனியாவது எமக்காகச் செயற்பட முன்வரும் என நம்புகின்றோம்.

இந்த 74 வருட காலமாக இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த இனவாத ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக, மனித குலமாகக் கூட மதிக்கவில்லை. மாறாக எம்மீது போர்தொடுத்து, எமது இனத்தை அழித்து எமது இனத்தின் அடையாளத்தையே இல்லாதொழிக்கும் தந்திரோபாய முறைகளையே கையாண்டு வந்தது. இதற்கு ஆதரவாக சில தமிழ் அரசியலாளர்கைளயும் தங்கள் பக்கம் சாய்த்து எமது போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டம் என உலகத்திற்குச் சித்தரித்து அதனூடாக வெற்றியீட்டி, தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாகிய விடுதலைப் புலிகளினுடைய போராட்டத்தை தனிப் போராட்டமாகச் சித்தரித்துச் செயற்பட்டது.

தொடர்ந்தும் எமது தமிழ்த் தலைவர்கள் இவ்வாறான சிங்கள இனவாதத் தலைவர்களின் வலைக்குள் சிக்கிக் கொள்ளாமல் தெளிவாகவும் வழிப்பாகவும் இருந்து எமது மக்களின் உரிமை தொடர்பான விடயங்களில் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.