அடுத்த தலைமைத்துவம் பற்றி தலைவரின் 62 வது பிறந்தநாளில் கூறவேண்டியது.

தலைவர் அஷ்ரப் அவர்கள் தனது ஐம்பது வயதை தாண்டியதும் முஸ்லிம் காங்கிரஸ் என்னும் பேரியக்கம் தனது மரணத்துக்கு பின்பு அழிந்துவிட கூடாது என்னும் நோக்கில் அடுத்த தலைமைத்துவமாக ரவுப் ஹக்கீம் அவர்களை வளர்த்தார். ஆனால் இன்றைய தலைவர் 62 வயதை அடைந்தும் இன்னும் அடுத்த தலைமைத்துவத்துக்கு எவரையும் வளர்க்கவுமில்லை, உருவாக்க முயற்சிக்கவுமில்லை.

மாறாக காலத்துக்கு ஏற்பவும், சந்தர்ப்பத்துக்கு ஏற்பவும் ஒவ்வொருவரை தேர்தலுக்காகவும், வேறு தேவைகளுக்காகவும் மட்டும் பயன்படுத்திவிட்டு கைகழுவி விடுகின்ற அரசியலை தொடர்ந்து செய்ய முடியாது.

தற்போதைய நிலையில் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் மரணித்தால் முஸ்லிம் காங்கிரஸ் என்னும் பேரியக்கம் உடைந்து சின்னாபின்னமாகுவதுடன், ஊருக்கொரு தலைவரும், ஊருக்கொரு கட்சியும் உருவாகலாம் என்று நினைத்து கட்சியை நேசிக்கின்ற நாங்கள் அச்சப்படுகின்றோம்.

அவ்வாறு பிரதேச ரீதியாகவும், கட்சிரீதியாகவும் பல கூறுகளாக பிரிந்து சின்னாபின்னமாகிய பின்பு முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒற்றுமைப் படுத்துவதென்பது காணல் நீராகிவிடும்.

தனது அழகிய சிரிப்பினாலும், நம்பிக்கைதரும் வாக்குறுதிகளினாலும் அப்பாவி இளைஜர்களையும், சமூக அரசியல் பற்றிய தெளிவு இல்லாதவர்களையும், எதிர்கால அரசியல் பதவிகள் பற்றிய கனவு உலகில் மிதப்பவர்களையும் ஏமாற்றலாம்.

ஆனால் இறைவனின் நீதியிலிருந்தும், அவனது தண்டனையிலிருந்தும் ஒருபோதும் தப்பிக்க முடியாது. அது ஒரு நாள் இறுக்கமாக பிடித்துக்கொள்ளும். அப்போது உதவிக்கு யாரும் வரமாட்டார்கள். வரவும் முடியாது. தற்போது “மானே, தேனே, தென்மானே” என்றெல்லாம் புகழ் பாடுகின்றவர்கள் அனைவரும் ஓடி ஒழிந்துவிடுவார்கள் அல்லது வேறுபக்கம் சென்றுவிடுவார்கள்.

தான் வாழும்வரைக்கும் அனுபவித்துவிட்டு செல்வது அல்லது இரா சம்பந்தன், மு. கருணாநிதி போன்றவர்கள் போன்று தள்ளாடுகின்ற வயதிலும் தலைமைத்துவம் வகிக்கலாம் என்று நினைப்பது எமது சமூகத்தில் சாத்தியமில்லை.

எனவே தனிப்பட்ட தேவைக்காக கையேந்துகின்ற சுயநல கூட்டத்தை வைத்துக்கொண்டு தொடர்ந்து கட்சி நடத்தலாம் என்ற சிந்தனையை கைவிட்டுவிட்டு சமூகத்தில் உள்ள திறமையானவர்களை தேடிப்பிடித்து கட்சிக்குள் உள்வாங்கி சிறந்த கட்டமைப்பாக முஸ்லிம் காங்கிரசை உருவாக்க முயற்சிப்பதுடன் அடுத்த தலைமைத்துவத்தினை கட்டமைக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.

அத்துடன் தனிப்பட்டரீதியில் ரவுப் ஹக்கீம் என்பவரை ஒருபோதும் நான் விமர்சித்ததில்லை. ஆனால் அரசியல்வாதி என்ற ரீதியிலேயே விமர்சித்துள்ளேன். இருந்தாலும் இன்றைய அவரது 62 வது பிறந்தநாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

முகம்மத் இக்பால்

சாய்ந்தமருது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.