பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு ஏகமனதாக நிறைவேற்றம்

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கத்தை வலுவாக கொண்டு செல்லும் முன்மொழிவு இன்று (21) பிற்பகல் பாராளுமன்ற குழு அறை இலக்கம் 1 இல் இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் அரசாங்கம் அதனை வலுவாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், அதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் அவர்கள் முன்மொழிந்தார்.

அந்த முன்மொழிவிற்கு அனைத்து உறுப்பினர்களும் கைகளை உயர்த்தி ஏகமனதாக ஆதரவளித்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் யூ.கே.சுமித் அவர்கள் முன்மொழிவை உறுதிசெய்தார்.

எதிர்வரும் வாரங்களில் மக்களுக்கு தேவையான துரித நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

ஒருசில வாரங்களுக்குள் எரிபொருள் மற்றும் மின்தடை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக இதன்போது கருத்து தெரிவித்த வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவர்கள் தெரிவித்தார். அதேபோன்று எரிவாயு (கேஸ்) பிரச்சினையையும் ஒருசில வாரங்களுக்குள் தீர்க்க முடியும் என கல்வி மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பதிரன அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்தியில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளிலிருந்து வெளியேறி பெற்றுக்கொடுத்த ஆரதவிற்கு கட்சியின் சகல உறுப்பினர்களும் நன்றிகளை தெரிவித்தனர்.
புதிய அமைச்சர்கள் எதிர்கால நடவடிக்கைகளை வலுவாக முன்னெடுத்து செல்வதற்கு தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதாக உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

அரசாங்கத்தை சீர்குலைக்கும் பொய்ப் பிரசாரங்களின் மூலம் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ பிரதமரிடம் நம்பிக்கை வெளியிட்டனர்.

அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ சபாநாயகரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற சபாநாயகரின் செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன, பிரதமரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் பிரியந்த ரத்னாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
பிரதமர் ஊடக பிரிவு

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்