பொதுமக்களின் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு அரச உத்தியோகத்தர்களும் உதவ வேண்டும் – இம்ரான் எம்.பி –

எப்.முபாரக்  2022-04-25
பொருட்களின் கண்மூடித்தனமான விலையேற்றம், வாழ்க்கைச் செலவு உயர்வு என்பவற்றைக் கண்டித்து பொதுமக்கள் முன்னெடுத்து வரும் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு சகல அரச உத்தியோகத்தர்களும் தமது ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டுமென திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சின்னாபின்னமாகியுள்ளது. கேட்பார் பார்ப்பற்ற நிலையில் பொருட்களின் விலை நாளாந்தம் உயர்த்தப் படுகின்றது. இதனால் மிகப் பெரும்பான்மையான மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமது எதிர்ப்புகளை இந்த அரசுக்கு நாளாந்தம் நாடு முழுவதும் ஜனநாயக ரீதியில் தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பொருளாதார சீரழிவினால் அரச உத்தியோகத்தர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தினமும் விலை உயர்கின்ற அளவுக்கு அவர்களது சம்பளம் உயரவில்லை. இதனால் பெரும்பாலான அரச உத்தியோகத்தர்கள் கடனுடனும், அரை வயிற்றுடனும் தற்போது தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துகின்றனர். கௌரவம் கருதி அரச உத்தியோகத்தர்களால் இதனை வெளியில் சொல்ல முடிவதில்லை.
இந்த விடயம் சொகுசு வாழ்க்கை வாழும், ஜனாதிபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், பதவி ஆசை கொண்டு அமைச்சுக்களை பொறுப்பெடுத்துள்ளோருக்கும் தெரியா விட்டாலும் எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் மக்களோடு மக்களாகவே இருக்கின்றேன்.
எனவே, பாதிக்கப்பட்டோர் என்ற வகையில் பொதுமக்கள் முன்னெடுத்து வரும் ஜனநாயக ரீதியான போராட்டங்களுக்கு சகல அரச உத்தியோகத்தர்களும் ஜனநாயக ரீதியில் தமது ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும். இது குறித்து தொழிற்சங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆசிரிய தொழிற்சங்கங்கள் இந்த விடயம் குறித்து தீர்மானித்து பொதுமக்களின் போராட்டங்களுக்கு தமது ஒத்துழைப்புகளை வழங்க முன்வந்துள்ளனர். இதனை நான் வரவேற்கின்றேன். இதே போல ஏனைய சகல அரச உத்தியோகத்தர்களும் தமது ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.