“கட்சிக்கு துரோகம் செய்பவர்களை எவ்வித தயவு தாட்சணையுமின்றி வெளியேற்ற வேண்டும், இல்லாதவிடத்து பதவிகளை துறக்கத் தயார்” – மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள்!

ஊடகப்பிரிவு-
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதினால் அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், இது தொடர்பில் கட்சியின் உயர்பீடம் துரிதமாக  செயற்படாதவிடத்து, தாங்கள் வகிக்கும் பிரதேச சபையின் பதவிகளை இராஜினாமா செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளனர்.
மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட கட்சியின் உயர்பீடத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு, கட்சியின் நகர அமைப்பாளர் எம்.எச்.முஹம்மத் தலைமையில், இன்று (25) புத்தளத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட புத்தளம், கல்பிட்டி, வண்ணாத்தவில்லு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கூட்டாக இந்த வேண்டுகோளினை முன்வைத்தனர்.
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான முஹம்மத் ஆசிக், பைசல் மரைக்கார், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் றிபாஸ் நசீர், வண்ணாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர் எம்.அனஸ்தீன் மற்றும் புத்தளம் வட்டாரங்களின் அமைப்பாளர்களும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துரைத்த புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் முஹம்மத் றிபாஸ் நசீர்,
“தலைமைத்துவம் தொடர்ந்தேர்ச்சையாக, கட்சி கட்டுப்பாட்டினை மீறுபவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதினால்தான் அவர்கள் பதவிக்கு வந்ததும், துரோகங்களை இழைக்கின்றனர். இதனால் தலைமைத்துவம் மட்டுமல்ல, வாக்களித்த மக்களும் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடுகின்றது. இந்த நிலை தொடருமாயின் கட்சியின் கட்டுக்கோப்பு சீர்குலைந்து போய்விடும்.
ஒரு மக்கள் இயக்கத்தினை உருவாக்குவதற்கு போராளிகள் செய்யும் தியாகங்கள் அளப்பறியது. அந்தவகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை உருவாக்க தலைவர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட சிலர் செய்த தியாகங்களை, நேற்று கட்சிக்குள் வந்த வியாபாரிகள் இல்லாமல் ஆக்கி செல்வதுடன், கட்சியின் மீதும், தலைமைத்துவத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை சீர்குலைக்கின்றனர்.
இனி மேலும் இதற்கு இடங்கொடுக்க முடியாது. சில தீர்மானங்களை தலைமைத்துவமும், உயர் சபையும் துணிச்சலுடன் எடுப்பதன் மூலமே இவ்வாறு அடையாளம் காட்டப்படும் நபர்களை சமூகம் துடைத்தெறியும்” என்று கூறினார்.
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் பைசல் மரைக்கார் கருத்துரைக்கையில்,
“கடந்த தேர்தலின் போதே மெற்படி  நபருடைய செயற்பாடுகள் தொடர்பில் தலைமைக்கு எடுத்துரைத்தோம். அபிவிருத்தி என்ற போர்வையில், தமது சொந்த இலாபங்களுக்காக ஆளுங்கட்சிக்கு முட்டுக் கொடுத்துவிட்டு, வாக்களித்த எமது மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தாமல், தமது தேவைகளை நிறைவேற்றும் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவே அலி சப்ரி றஹீமை பார்க்கின்றோம்.
எனவே, கட்சியின் தலமை உடனடியாக இவரை கட்சி உறுப்புரிமையிலிருந்து விலக்க வேண்டும். கட்சிக்கும், சமூகத்திற்கும், வாக்களித்த மக்களுக்கும் இப்படிப்பட்ட துரோகத்தனத்தினை செய்தவர்களால், கட்சிக்கு அவப் பெயரே ஏற்படும் என்பதை  தலைமைக்கு வலியுறுத்துகிறோம்” என்று கூறினார்.
கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் முஹம்மத் ஆசிக் ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,
“தலைவர் ரிஷாட் பதியுதீன் அமைச்சராக இருந்த போது, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அமைப்பாளராக இருந்தார். அப்போது, முழுமையான அபிவிருத்திகளை தலைவரே செய்தார். அப்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நல்லவர். இப்போது கூடாதவர் என்று கூறுகின்றார். இப்போது ரிஷாட் பதியுதீன் புளிக்கின்றதா? எனக் கேட்கின்றேன்.
மொட்டுக்கு முட்டுக்கொடுத்து, ஆட்சியாளர்களின் அபிவிருத்திகளை மக்களுக்கு என்று சொல்லி தனிப்பட்ட பல விடயங்களை சாதித்துள்ளதை நாமும், மக்களும் அறியாதவர்கள் அல்ல.
நாட்டில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் உணவுத் தட்டுப்பாடுகள் அதிகரித்து காணப்படும் இந்த வேளையில், மக்களின்பால் நின்று அவர்களுக்காக பேசாமல், அமைச்சுப் பதவிக்காக காட்டிக் கொடுக்கும் அநியாயத்தை செய்து, அமைச்சுப் பதவியினை பெற்றுக்கொண்டு வந்தால் புத்தளம் மக்கள் மலர் மாலையா அணிவிக்கப் போகின்றார்கள்? என கேள்வி எழுப்பிய உறுப்பினர் முஹம்மத் ஆசிக், மக்கள் கடும் சினத்துடன் இருப்பதை பாராளுமன்ற உறுப்பினர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
வண்ணாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர் எம்.அனஸ்தீன் இதன்போது கருத்துரைக்கையில்,
“கட்சிக்கும், தலைமைக்கும் துரோகத்தை இழைத்த அலி சப்ரி றஹீம் எம். பியினை ஏன் அழைத்து விசாரிக்க வேண்டும்? அவரே அவரது வாயினால் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள விடயங்கள், அவர் கட்சி உறுப்புரிமைக்கு தகுதியற்றவர்  என்பதை கோடிட்டு காட்டுகின்றது.
ஆளுங்கட்சியுடன் கூட்டு சேர்ந்து, மாய அபிவிருத்தி என்பதை மக்களிடத்தில் உண்மைப்படுத்த முயற்சித்து தோல்வியடைந்த இந்த அலி சப்றி றஹீமை, அண்மையில் இஸ்மாயில்புரம் மற்றும் கரைத்தீவு மக்கள் துரத்தியடித்தனர்.
ஒரு மனைவிக்கு இரு கணவர் இருப்பது போன்று, மாவட்ட அபிவிருத்தி குழுவுக்கு இரண்டு கணவர்கள். அவர்கள் எப்போதும் தீர்மானம் எடுப்பதில் இழுபறி நிலையிலேயே உள்ளனர். இந்த நிலையினை நாம் காணுகின்றோம்.
கட்சியின் தலைவருக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையின் அடிப்படையில், தீர்மானங்களை துணிச்சலுடன் எடுப்பதுடன், இவரது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பறிக்கப்படல் வேண்டும். இதுபோன்று கட்சி முன்மாதிரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்” என்றும் அனஸ்தீன் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், நகர சபை முன்னாள் வேட்பாளர் எம்.முர்சிட் அவர்களும் பங்குபற்றினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.