எமது மொழியை பாதுகாக்கும் படைப்புக்கள் காலத்தின் தேவையாக உள்ளன.-பிரதேசசபைத் தவிசாளர் வாமதேவன்.

எமது சமயம் மற்றும் மொழி ஆகியவற்றை பாதுகாக்கின்ற நூல் படைப்புக்கள் காலத்தின் தேவையாகக் காணப்படுவதாக சாவகச்சேரி பிரதேசசபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்துள்ளார்.அண்மையில் சாவகச்சேரி பிரதேசசபையில் இடம்பெற்ற “தென் உதயதாரகை” நூல் வெளியீட்டு நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
கடந்த கால இலக்கியப் படைப்புக்கள் ,வரலாறுகள் பல இன்று காலத்தால் அழிக்கப்பட்ட நிலையில் மறைக்கப்பட்ட ஒன்றாக காணப்படுகின்றன.அந்த அழிவடைந்த படைப்புக்களை தொகுத்து நூல் வடிவாக்கி இளைய சமூதாயத்திடம் கையளிக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.அந்தவகையில் கச்சாய் சின்னையா புலவரின் நூல்களை தேடித் தொகுக்க உதவிய சட்ட ஆய்வாளர் சோதிநாதன் தனது சமூகக் கடமையை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.
இன்றைய சமூகம் ஆன்மீக ரீதியான சிந்தனைகளில் இருந்து விடுபட்டு நெறி தவறிச் செல்வது எல்லோரும் அறிந்த விடயம்.
ஆனால் நாம் சமூகத்தை குறை கூறுகின்றோமே தவிர அதற்கான தீர்வுகளை முன்வைக்காதவர்களாக காணப்படுகிறோம்.இன்றைய இளைஞர்களை வழிபடுத்த ஏற்ற வகையில் அவர்களுக்கான வாய்ப்புக்களை சமூகம்  வழங்குகின்றதா என்ற கேள்வி எழுகிறது.
தொலைத்தொடர்பு சாதனம் ஊடாக வாசிப்பு பழக்கம் அருகி வரும் நிலையில் சிறந்த நூல்களை வெளியிடுவதன் மூலம் இளம் சமுதாயத்தை நேர்வழிப்படுத்த முடியும்.இன்றைய இளம் சமுதாயத்தை சீர்படுத்தக்கூடிய படைப்புக்களை கலைஞர்கள் படைக்க முன்வர வேண்டும்.எமது சமயம் இன்று பலராலும் சிதைக்கப்படுகிறது.
இந்த இக்கட்டான நேரத்தில் எமது சமயம் மற்றும் மொழி ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமது சமூகத்திற்குண்டு.என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.