சாவகச்சேரி நகரசபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் வட்டார அலுவலர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம்-நடனதேவன் வலியுறுத்து.

சாவகச்சேரி நிருபர்
சாவகச்சேரி நகரசபையில் தீயணைப்புப் பிரிவு மற்றும் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வட்டார அலுவலர்களுக்கான இட ஒதுக்கீடு அவசியம் என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ம.நடனதேவன் வலியுறுத்தியுள்ளார்.கடந்த செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நகரசபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக் காணி விவகாரம் தொடர்ந்து சபையில் பேசப்படுகிறது.சமுர்த்தி வங்கி அமைக்க நகரசபை கொள்வனவு செய்த சிறுவர் பூங்கா காணி மற்றும் நகரசபைக்கு அருகாமையில் உள்ள காணியில் இடம் கொடுக்க முடியாது.இதுவே சபைத் தீர்மானம்.காணி வழங்கும் விவகாரத்தில் சபையே முடிவெடுக்க வேண்டும்.சமுர்த்தி காணி விவகாரத்தில் இதுவரை அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி விட்டு தற்போது கடைசியில் எமது சபையிடம் வந்து நிற்கிறார்கள்.சமுர்த்தி வங்கிக் காணியை அவர்களாகவே தேடிப் பெற வேண்டும்.ஒரு அரசாங்க நிறுவனத்திற்கு காணி வழங்க வேண்டிய அவசியம் இல்லை.இவ் விடயத்தில் மிரட்டியோ, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தியோ காணியைப் பெற முயற்சிக்கக் கூடாது. சிறுவர் பூங்கா அமைப்பதற்கான சகல திட்டங்களையும் தீட்டிய பின்னர் அந்தக் காணியில் இடம் கேட்பது பொருத்தமற்றது.இதனை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.எதிர்காலத்தில் சாவகச்சேரி நகரசபையில் தீயணைப்புப் பிரிவு அமைக்கும் பட்சத்தில் அதற்கு உரிய இட ஒதுக்கீடு தேவை.அதனை விட தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வட்டார அலுவலர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம்.சாவகச்சேரி நகரசபை மாநகரசபையாக தரமுயரும் பட்சத்தில் தற்போது இருக்கும் காணிகளே போதாத நிலை ஏற்படும்.என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.