புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் தென்மராட்சி கல்வி வலயம் முதலாவது தமிழ் வலயமாக உள்ளது-வலயக்கல்விப் பணிப்பாளர்

சாவகச்சேரி நிருபர்
அண்மையில் வெளியான புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தென்மராட்சிக் கல்வி வலயம் இலங்கையின் முதலாவது தமிழ் வலயமாகக் காணப்படுவதாக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.அண்மையில் வலயக்கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
வெளியான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இலங்கையில் உள்ள 100கல்வி வலயங்களில் தென்மராட்சி கல்வி வலயம் 16ஆவது வலயமாக காணப்படுகிறது.அதிலும் முதலாவது தமிழ் வலயமாக தென்மராட்சி மிளிர்கிறது.
வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேறு பெற்ற மாணவர்களின் அடிப்படையில் எமது வலயம் இலங்கையில் ஆறாவது வலயமாக காணப்படுகின்றது.இது ஓர் சாதனையாக கருதப்படுகிறது.தென்மராட்சி கல்வி வலய ஆரம்பப் பிரிவு கற்றல்,கற்பித்தல் செயற்பாடு மிகச்சிறந்த நிலையில் உள்ளமையை இது எடுத்துக்காட்டுகிறது.
இம்முறை ஆரம்பப் பிரிவில் சில பிரதேசங்களை முன்னுருமைப்படுத்தி அதில் வெற்றி பெற்றுள்ளோம். நாம் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு கூடுதலான பங்களிப்பாற்றி வருகிறோம்.பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை நாம் கண்காணிக்காது விட்டால் அவர்களது எதிர்காலம் பாதிப்படையும்.
அந்தவகையில் மட்டுவில் வடக்கு அ.த.க பாடசாலையில் 16மாணவர்கள் தோற்றி அனைவரும் 100புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதுடன்  நால்வர் சித்தியடைந்துள்ளனர். அதேவேளையில் வரணி வடக்கு அ.த.க பாடசாலை மாணவர்கள் 10பேர் தோற்றி சிறந்த பெறுபேற்றைக் காட்டியுள்ளனர்.அதனைவிட கோவிலாக்கண்டி பாடசாலைக்கு பாடசாலையின் 72வருட கால சரித்திரத்தில் முதல் தடவையாக இம்முறை சித்தி கிடைத்துள்ளது.மறவன்புலோ பாடசாலை மாணவர்களும் அதே போன்று சிறந்த பெறுபேற்றைக் காட்டியுள்ளனர்.எமது கல்வி வலய
கிராமிய பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அடைவு மட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளமையை எம்மால் காணக்கூடியதாக உள்ளது.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.