வளப் பற்றாக்குறையால் 5வருடங்களாக இயங்காமல் இருக்கும் தொலைக்கல்வி மத்திய நிலையம்.

சாவகச்சேரி நிருபர்
தென்மராட்சி வலயக்கல்வி அலுவலகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையம் கணணிகள் வழங்கப்படாமையால் 5வருட காலமாக இயங்காமல் காணப்படுவதாக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் சுட்டிக்காட்டியிருந்தார்.
கடந்த புதன்கிழமை குறித்த நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
எமது வலயக்கல்வி அலுவலகத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையத்திற்கு 80கணணிகள் தேவைப்பாடாக உள்ளன.பெறுமதியான கட்டிடம் கட்டியும் கணணிகள் இல்லாமையால் 5வருடங்களாக தொலைக்கல்வி நிலையத்தை இயக்க முடியாத நிலை காணப்படுகிறது.
இவ்வாறான ஓர் நிலை தான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் காணப்படுகிறது.அங்கும் பெறுமதியான கட்டடம் அமைத்தும் அதற்கான உபகரணங்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.
80கணணிகள் தேவைப்பாடுடைய எமது வள நிலையத்திற்கு தற்போது இரண்டு கணணிகள் தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் ஊடான வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இதனை வைத்துக் கொண்டு எமது மத்திய நிலைய செயற்பாட்டை ஓரளவிற்கு ஆரம்பிக்க முடியும்.கணணிகள் இல்லாமையால் இரண்டரை வருட காலமாக மத்திய நிலையத்திற்கு நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உத்தியோகத்தர்கள் பயன்பாடு இன்றிக் காணப்படுகின்றனர்.
உரிய கணணிகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் எமது வலயத்தின் தொலைக்கல்வி மத்திய நிலையம் ஊடாக பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்களுக்கு கணணி பயிற்சி நெறி வழங்கி தொழில்வாய்ப்பிற்கு ஏற்ற வகையிலான சான்றிதழ்களை வழங்கி வைக்க முடியும்.80கணணிகள் எப்போது கிடைக்கும் எனத் தெரியாது ஆனால் கிடைக்கும் பட்சத்தில் தற்போது அவசர உதவியாக தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் வழங்கிய இரண்டு கணணிகளும் அவர்களது அனுமதியுடன் பின்தங்கிய பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்படும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.