சாய்ந்தமருதில் இரவில் துர்நாற்றம் வீச காரணமென்ன?  களவிஜத்தில் கண்டுகொண்ட உண்மைகளும், வெளிவர தயங்கும் எதார்த்தங்களும் !

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருதில் சில நாட்களாக பிந்திய மாலை பொழுது முதல் அதிகாலை நேரம் வரை பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த சாய்ந்தமருது ஜும்மா பெரியபள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச வாசிகள் இந்த தூர்நாற்றம் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் அமையப்பெற்றிருக்கும் விலங்கறுமனையிலிருந்து வருவதாகவும், மாட்டின் என்புகள் மற்றும் மாட்டின் தோலை தீயிட்டு அழிப்பதனால் வரும் துர்நாற்றம் என்றும் தெரிவித்ததுடன் இந்த துர்நாற்றம் காரணமாக குடியிருப்பு பிரதேசங்களில் நாங்கள் பலத்த சங்கடங்களை அனுபவிப்பதாகவும் இது தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமணைக்கு அறிவித்தும் பயனில்லை என்றும் சுகாதார அதிகாரிகள், கல்முனை மாநகர சபையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய குறித்த விலங்கறுமனைக்கு திடீரெனெ களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டபோது இந்தவிலங்கறுமனையில் மாடுகளை அறுக்கும் இடம் சுத்தமாக இருந்ததுடன் உப்பு மற்றும் இரசாயன பதார்த்தங்களை கொண்டு மூன்று மாதமளவில் சேர்க்கப்பட்ட தோலை பதப்படுத்தி வைத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. மட்டுமின்றி மலைபோன்று குவித்து வைத்திருக்கும் என்புகளை இயந்திரங்களை கொண்டு தூளாக்கி வைத்திருந்த குறித்த விலங்கறுமனை ஊழியர்கள் அதனை கோழித்தீன் தயாரிக்க ஏற்றுமதி செய்யவுள்ளதாக தெரிவித்தனர். இந்த தோல்கள் குறித்த விலங்கறுமனையில் அறுக்கபப்ட்ட மாடுகளிலிருந்து பெறப்பட்டவை மட்டுமின்றி மட்டக்களப்பு முஸ்லிம் பிரதேசங்களிலிருந்தும் வாகனங்களில் தருவித்து லெதர் ஏற்றுமதிக்காக பதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அங்கு தோல்கள் வெயிலில் உளறவிடப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

குறித்த விடயம் தொடர்பில் விலங்கறுமனை உரிமையாளரான மீராசாஹிப் அஷ்ரபை ஊடகங்கள் சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட போது 13 வருடங்களாக இந்த பணியை வெற்றிகரமாக செய்து வருகிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களும், அவர்களின் தேவைகளை செய்வதற்கு நான் தடையாக இருப்பதாக எண்ணுபவர்களும் இப்படியான கதைகளை அடிக்கடி பரப்புவது வழக்கம். அபியா தனியார் கூட்டுநிறுவன துணைநிறுவனமான ஹலால் விலங்கறுமனை சாய்ந்தமருதில் இயங்கி வருகிறது. கடந்தகாலங்களில் சுகாதார துறையினரின் நேரடி விஜயத்தின் பின்னரான ஆலோசனைகளின் பிரகாரம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந்த விலங்கறுமனை சிறப்பாக இயங்கி வருகிறது.

விலங்கறுமனை நடவடிக்கைகளை ஒழுங்காக செய்வதற்கு சோடியம் சல்பேட் எனும் இரசாயன பொருளை பயன்படுத்தி வருகின்றோம். இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை காரணமாக அந்த இரசாயன பொருளை இறக்குமதி செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இருந்தாலும் இறக்குமதி செய்யப்பட்ட சோடியம் சல்பேட் எனும் இரசாயன பொருள் துறைமுகத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் தாண்டியும் நாங்கள் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு சுகாதார வழிமுறைகளின் படியே இந்த விலங்கறுமனை நடவடிக்கைகளை ஒழுங்காக செய்து வருகிறோம். இரவு நேரங்களில் வரும் துர்நாற்றம் உண்மையே. ஆனால் அது எங்கள் விலங்கறுமனை நடவடிக்கை மூலம் ஏற்படுவதல்ல. பின்னேர நேரங்களில் முறையற்ற விதமாக ஆற்றோரங்களில் கொட்டப்படும் கோழி கழிவுகளினால் ஏற்படுவது. இரவு நேரங்களில் ஆவியிர்ப்பு நடவடிக்கை நடைபெறும்போது துர்நாற்றம் வீசிகிறதாக நினைக்கிறேன். எனது விலங்கறுமனை ஊரிலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சுகாதார தரப்பினர் நேரடியாக எங்களின் விலங்கறுமனைக்கு வந்து பரிசோதனை செய்து அவர்கள் முன்வைக்கும் தீர்வை ஏற்று அதன்படி நடக்க நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

குறித்த விலங்கறுமனை நடவடிக்கைகள் மூலம் தினமும் 40 மாடுகள் அளவிலும், வெள்ளிக்கிழமை மற்றும் பெருநாள் தினங்களில் 60 மாடுகள் அளவிலும் அறுக்கப்படுவதாகவும் மாட்டின் தோல், என்பு, சாணம் போன்ற சகல பகுதிகளும் வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கும் ஹலால் விலங்கறுமனை நிர்வாகத்தினர் பணமீட்டும் மூலப்பொருட்களை தீயிட்டு அழிக்க நாங்கள் முட்டாள்கள் இல்லை என்கின்றனர். கடந்த காலங்களில் தொழில் போட்டி மற்றும் வேறுபல காரணங்களினால் வாகனங்கமொன்றும் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவமும் ஹலால் விலங்கறுமனை பணிப்பாளர் மீராசாஹிப் அஷ்ரபின் சொந்த வாகனம் தாக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

இந்த விடயம் தொடர்பில் கல்முனை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ஜே.கே.எம். அர்சத் காரியப்பரை ஊடகங்கள் சந்தித்து கேள்வியெழுப்பியபோது கல்முனை மாநகர சபை நிர்வாகத்தினால் செய்யவேண்டிய இந்த விலங்கறுமனையை வளப்பற்றாக்குறை மற்றும் பல காரணங்களினால் தனியார் ஒருவர் செய்துவருகிறார். குறித்த துர்நாற்ற விவகாரம் தொடர்பில் நானறிந்துள்ளேன்.

துரதிஷ்டவசமாக எழுத்துமூல முறைப்பாடுகள் என்னுடைய கைக்கு இதுவரை கிட்டவில்லை. கல்முனை முதல்வரின் பூரண ஒத்துழைப்பும், இந்த பிரச்சினைகளை தீர்க்க கூடிய வளங்களும் கிடைத்தால் நிரந்தர தீர்வை வழங்கி இந்த பிரச்சினையை தீர்க்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

தனது சேவைக்காலத்தில் கல்முனை மாநகர சபையில் சிறப்பாக பணியாற்றி பலரதும் பாராட்டை பெற்ற கல்முனை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ஜே.கே.எம். அர்சத் காரியப்பர், கல்முனை மாநகர முதல்வர்சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்